பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை இராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தி எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அரசாங்கத் தடை மற்றும் நூற்றுக்கணக்கான ஆர்வலர்கள் கைது செய்யப்பட்ட போதிலும், பாகிஸ்தான் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் திங்களன்று ஒரு மத்திய நகரத்தில் (முல்தான்) திரண்டதுடன், பிரதமர் இம்ரான் கானின் மோசமான ஆட்சி மற்றும் திறமையின்மை காரணமாக இராஜினாமா செய்யுமாறும் அழைப்பு விடுத்தார்.

பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக, அரசாங்கத்தின் உத்தரவின் கீழ் நூற்றுக் கணக்கான போராட்டக்காரர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தபோதும் தொடர்ந்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நாட்டில் கொவிட்-19 நோயாளர்களின் அதிகரிப்பினால் இம் மாத தொடக்கத்தில் பொது பேரணிகளுக்கு தடை விதிக்க அரசாங்கம் அறிவித்தது. 

பெப்ரவரி முதல், வைரஸ் பரவல் ஆரம்பித்ததிலிருந்து பாகிஸ்தானில் 398,000 க்கும் அதிகமான கொரோனா நோயாளர்களும் 8,025 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

இந் நிலையிலேயே இம்ரான் கானை பதவி விலகுமாறு வலியுறுத்தி எதிர்க்கட்சி ஆதரவாளர்களினால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்போது முந்தைய நாளில் 370 க்கும் மேற்பட்டவர்களை கைது செய்ததாக பொலிஸார் ஒப்புக் கொண்டதுடன், முல்தானில் உள்ள அதிகாரிகள் அப் பகுதியின் கையடக்கத் தொலைபேசி வலயமைப்புக்களையும் துண்டுத்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு, பாதுகாப்புப் படையினர் ஒரு பொது பூங்காவிற்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதை தடுக்கும் நோக்கில் முக்கிய சாலைகளில் கொள்கலன்களை வைத்தனர். எனினும் போராட்டக்காரர்கள் பூங்காவிற்குள் ‍நுழைய முயன்றமையினால் அது மோதல்களுக்கு வழிவகுத்ததுடன், அதன்போது கைது நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களில் முன்னாள் பிரதமர் யூசப் ராசா கிலானியின் புதல்வர் அலி மூசா கிலானி என்பவரும் அடங்குவார்.

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ்ஸும் இந்த பேரணியில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.