(எம்.மனோசித்ரா)

கேகாலை மாவட்டத்தில் அண்மையில் வைத்தியரொருவர் பொறுப்பற்று செயற்பட்டுள்ள செய்திகள் வெளியாகியுள்ளன. 

இவ்வாறு செயற்படுபவர்களின் பின்னணி குறித்து ஆராய்ந்த உயர்ந்தபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திளன் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

கேகாலை - ருவன்வெல்லவில் அண்மையில் வைத்தியரொருவர் தொற்றுக்குள்ளானமையும் , அவர் எவ்வித சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றாமல் பலருக்கும் சிகிச்சை வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இவ்வாறு பொறுப்பற்று செயற்படும் நபர்கள் யார் என இனங்காண்பதோடு , அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உயர்ந்தபட்ச தண்டனையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

இதே வேளை மக்களும் பொறுப்பின்றி செயற்படுவார்களாயின் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலுக்குள்ளேலேயே வாழ வேண்டிய நிலைமையே ஏற்படும்.

இவ்வாறான நிலையில் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது களுத்துறையில் பி.சி.ஆர். முடிவுகள் சுமார் 5 நாட்கள் வரை தாமதமடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு முடிவுகள் தாமதமடைவது உகந்ததல்ல என்பதை நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளோம். எனவே தேசிய மட்டத்தில் செயற்படுகின்ற சுகாமதார அதிகாரிகளும் சுகாதார அமைச்சும் இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.

இறுதி 48 அல்லது 72 மணித்தியாலங்களில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட வீதத்தின் அடிப்படையிலான மதிப்பீட்டின் அடிப்படையிலேயே சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. 

அதே போன்று அபாயம் அற்ற பகுதிகள் அடையாளங்கள் காணப்பட்டால் அவற்றை தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்க முடியும். காரணம் எல்லா சந்தர்ப்பங்களிலும் பிரதேசங்களை மூடி வைத்துக் கொண்டிருக்க முடியாது.

முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்களை விட திறக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு பொறுப்புக்கள் அதிகமாகும். திறக்கப்பட்டுள்ள என்பதற்காக அவற்றை முழுமையான பாதுகாப்புடைய பகுதி என்று கூற முடியாது. 

அதேபோன்று தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள மக்களுக்கும் தற்போது பொறுப்புக்கள் அதிகரித்துள்ளன. 

எந்த சந்தர்ப்பத்திலும் அடிப்படை சுகாதார விதிமுறைகளைக் கைவிடாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டியது ஒவ்வொருவரதும் கடமையாகும் என்றார்.