( எம்.எப்.எம்.பஸீர்)

மஹர சிறைச்சாலையின் களேபர நிலைமை இன்று மாலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின்னர்,  இரவும் துப்பாக்கிச் சூட்டு சப்தங்கள் கேட்டன. 

இன்று இரவு 8.30 மணியளவில் நான்கு துப்பாக்கிச் சூட்டு சப்தங்கள்  இவ்வாறு கேட்கக் கூடியதாக இருந்தது. எவ்வாறாயினும் அதனால் பாரிய பிரச்சினை எதுவும் இல்லை என  தகவல்கள் தெரிவித்தன.

 இதனிடையே, களேபரம் கட்டுப்படுத்தப்பட்ட பின்னர்,  நீதிமன்றங்களால் பிணையளிக்கப்பட்ட, எனினும் தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியம் உள்ள 78 கைதிகள்  அட்டாளச்சேனையில் உள்ள தனிமைப்படுத்தல் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

இதனை பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண உறுதி செய்தார்.  இதனைவிட கொவிட் 19 தொற்று உறுதியான 187 கைதிகள்  கொழும்பு சிறைச்சாலையின் விஷேட வேறுபடுத்தப்பட்ட  பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் மஹர சிறைச்சாலையின் பாதுகாப்பு கடமைகளில் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் 200 பேரும்  சாதாரண பொலிசார்  400 பேரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

எவ்வாறாயினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்த  களேபரத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு பொலிஸாரோ அதிரடிப் படையினரோ சிறைச்சாலைக்குள் செல்லவில்லை என பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.