மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை ஸ்டஸ்பீ தோட்ட அவரவத்தை பிரிவில் இன்று காலை ஆறு மணிக்கு தனது மாட்டு பண்ணைக்கு புல் அறுக்க சென்ற ஒரு குழந்தையின் தந்தையான 25 வயதுடைய முனியாண்டி சதிஸ் என்பவர் ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் ஆற்றில்  சடலமாக கிடைப்பதை இன்று மதியம் 1.30 மணியளவில் அவதானித்த தோட்ட உத்தியோகத்தர் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளார்.

இந்நிலையில் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின்  பணிப்புரையில் உதவி அதிகாரி  சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளார். 

மேலும் அவரது மனைவி தற்போது கர்ப்பிணியாக உள்ளார் எனவும் காலை 6 மணிக்கு புல் அறுக்க சென்றவரை காணவில்லை என தேடிய போது குறித்த நபர் இவ்வாறு ஆற்றில் சடலமாக மிதப்பதை அயலவர்கள் கண்டதாகவும் அதன்பின் தோட்ட முகாமையாளருக்கு அறிவித்ததாகவும் பொலிஸ் உதவி அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் சம்பவ இடத்திற்கு திடீர் மரண விசாரணை அதிகாரி நரசிம்ம பெருமாள் சென்று பார்வையிட்ட பின்னர் அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.