-மீரா ஸ்ரீனிவாசன்-

 அண்மையில் நடந்து முடிந்த  அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை இலங்கை மிகவும் உன்னிப்பாக அவதானித்தது.  ஆனால், பதவியேற்கவிருக்கும் பைடனின் நிருவாகம் இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதாரத்தின் மீது எவ்வாறு தாக்கம் செலுத்தும் என்பதை ( பிராந்தியத்தில் புவிசார் அரசியல் போட்டி தீவிரம் அடைந்திருப்பதற்கு மத்தியில் ) பொறுத்திருந்து பார்க்கவேண்டியதாகும்.

 நடைமுறையில் உள்ள இராஜதந்திர  நியமங்களுக்கு ஏற்றமுறையில்  இலங்கையின் தலைவர்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவும், பிரதமர் மகிந்த ராஜபக்ஷவும் டுவிட்டரில் பைடனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்கள். என்றாலும் மற்றைய நாடுளின் தலைவர்களுடன்  ஒப்பிடும்போது இரு ராஜபக்சாக்களும் வாழ்த்துக்களை தெரிவித்ததில் காணப்படக்கூடியதாக இருந்த தாமதத்தை சமூக ஊடகங்களில் சிலர் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.  


   ஆனால், இராஜதந்திர உறவுகள் ( இங்கு சமச்சீர் இல்லாத வல்லமையைக்கொண்ட இருநாடுகளுக்கு இடையிலான உறவுகள் -- Asymmetrical power dynamic ) சமூக ஊடக தளங்களின் பின்னணியிலேயே அடிக்கடி  கட்டவிழ்கின்றன. எழுத்து எண்ணிக்கை மட்டுப்பாட்டுக்கு (Character limits )கட்டுப்பட்ட முறையில் தலைவர்கள் நல்லெண்ணங்களை பகிர்ந்துகொள்கிறார்கள். ஒரு பைடன் நிருவாகத்தின் கீழ் வாஷிங்டனுக்கும் கொழும்புக்கும் இடையிலான அத்தகைய நல்லெண்ணப் பரிமாற்றங்கள் இனிமேல் இனிமேல்தான் மடிப்பு அவிழவிருக்கின்றன.

  இரு தரப்பு  வர்த்தகம்
அரசியல், வர்த்தகம், பொருளாதாரம் தொடக்கம் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஒத்துழைப்பு வரை பல்வேறு துறைகளில் அமெரிக்கா இலங்கையுடன் ஊடாட்டங்களை செய்கிறது. அமெரிக்கா இலங்கையின் தனியொரு மிகப்பெரிய  ஏற்றுமதிச் சந்தையாகவும்  (வருடாந்தம் சுமார் 300 கோடி டொலர்கள்) அரசாங்க பிணைமுறியில் பெரிய முதலீட்டாளராகவும் விளங்குகிறது. மூலோபாய அடிப்படையில், அமெரிக்கா "கூடுதல் பாதுகாப்பையும் செழிப்பையும் கொண்ட ஆசிய -- பசுபிக் பிராந்தியத்தை  மேம்டுத்துவதற்கு " இருதரப்பு இராணுவ ஒத்துழைப்பை முன்னெடுக்கிறது.

அதேவேளை, சீனாவை எதிர்ப்பதில்  அமெரிக்கா உரத்துக்குரல் கொடுக்கின்றது. கடந்த  மாதம் கொழும்புக்கு விஜயம் செய்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ சீனாவை  "காட்டுமிராண்டி " (Predator) என்று வர்ணித்தார்.

   இலங்கையின் போருக்கு பின்னரான  தசாப்தத்தில் ( 2009 ஆண்டில் ராஜபக்ச அரசாங்கம் விடுதலை புலிகளை  தோற்கடிப்பதற்கு அமெரிக்கா உதவியது என்பது எல்லோருக்கும் தெரியும்) போர்க்குற்றங்களுக்காக பொறுப்புக்கூறலுக்கும் நீதிக்கும்  குரல்கொடுப்பதில் அமெரிக்கா முன்னரங்கில் செயற்பட்டது. ஆனால், ஜனாதிபதி டொனால்ட் டரம்பின் கீழ் மனித உரிமைகள் மீதான அழுத்தம் குறைவடையத்தொடங்கிவிடடது. ஐக்கிய நாடுகள் மன உரிமைகள் பேரவையில இருந்து அமெரிக்கா வெளியேறிய பிறகு மனித உரிமைகள் பற்றிய அக்கறை மேலும் கூடுதலான அளவுக்கு இல்லாமல் போய்விட்டது.

  இந்த புதிய பின்புலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளின் செல்திசையை திட்டவட்டமாக இப்போது  சொல்வது பொருத்தமில்லை என்கிற அதேவேளை, குறிப்பிடத்தக்க சில மாற்றங்கள் இடம்பெறும் என்று இலங்கையில் உள்ள நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

 முதலில், கடந்த காலத்தில் அமெரிக்கா வெளியேறிய சர்வதேச நிறுவனங்களில் மீண்டும் அது இணைவதற்கேதுவாக பல்தரப்பு ஒழங்குமுறையை ( Multilateralism ) உற்சாகத்துடன் மேம்படுத்துவதில் பைடன் நிருவாகம் அக்கறை காட்டும் என்று கொழும்பில் உள்ள  சர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்கா நிலையத்தின் பிரதி பணிப்பாளரான ஜோர்ஜ்குக் கூறினார்.

  " சுதந்திர உலகில் அமெரிக்கா மீண்டும் அதன் தலைமைத்துவ வகிபாகத்தை பெற்றுக்கொள்வதை  பைடன் விரும்புவார். அத்துடன் அந்த இலக்கை அடைவதற்காக மூலோபாய இருதரப்பு இராஜதந்திரத்துக்கு மேலதிகமாக பலதரப்பு அரங்குகளையும் அவர் பயன்படுத்துவார். அவர் இணைந்துகொள்ள விரும்பக்கூடிய சர்வதேச நிறுவனங்களில் இலங்கைக்கு மிகவும் கவலை தரக்கூடியது ஜெனீவா மனித உரிமைகள் பேரவையாகும். அடுத்துவரும் வருடங்களில் இலங்கையின் மனித உரிமைகள் பிரச்சினை ஜெனீவாவில் கிளப்பப்படும்" என்றும் குக் ' த இந்து 'வுக்கு சொன்னார்.

  மனித உரிமைகள் பிரச்சினை
2019 நவம்பரில் கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டதை அடுத்து " இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல்  மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தும் " 2015 ஜெனீவா  தீர்மானத்தில் இருந்து விலகும் அதன் தீர்மானத்தை கொழும்பு அறிவித்தது. அமெரிக்காவின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு பிறகு இலங்கையினால்  இணை அனுசரணை வழங்கப்பட்ட  அந்த தீர்மானம் அடுத்தவருடம் மார்ச்சில் ஜெனீவாவில் பரிசீலனைக்கு எடுக்கப்படவிருக்கிறது.

" மேலும், ஆசியாவில் ஆழமான உறவுகளைக்கொண்டிருப்பதில் அமெரிக்கா அக்கறை காட்டுகிறது.  இந்தியா, அவுஸ்திரேலியா, ஜப்பானுடன் சேர்ந்து அமெரிக்கா அமைத்திருக்கும் " குவாட் " அமைப்பின்  மூலம் இதை விளங்கிக்கொள்ளலாம். வாஷிங்டனில் மிகவும் உயர்ந்த மட்டங்களில் புதிய ஊடாட்டங்களை செய்வது குறித்து இலங்கை ஆராய்ந்து பார்க்கவேண்டிய அவசியம் இருக்கிறது. வெள்ளை மாளிகையுடன் மாத்திரமல்ல, அமெரிக்க காங்கிரஸுடனும் வலுவான தொடர்புகளை ஏற்படுத்தவேண்டும். ஆசியா மீதான அமெரிக்காவின் அக்கறையை பரஸ்பரம் பயனடைவதற்கு பயன்படுத்திக்கொள்ளவேண்டும் " என்று குக் கூறினார். இலங்கை மிலேனியம் ச லெஞ்ச் கோர்ப்பரேசன்  உடன்படிக்கையை (Millennium Challenge Corporation Agreement )புதிதாக  அணுகவேண்டும் என்பது குக்கின் அபிப்பிராயமாக இருக்கிறது. யார் வெள்ளைமாளிகையில் இருந்தாலும், அந்த உடன்படிக்கையை செய்துவிடவேண்டும் என்பதில் அமெரிக்கா கடும் அக்கறையாக இருக்கிறது.

     ஜனநாயக முனையில் டொனால்ட் ட்ரம்ப் செயததை விடவும் பெருமளவு நம்கிக்கையூட்டக்கூடிய உறுதிமொழிகளை பைடன் வழங்குகிறார் என்று கிழக்கு மாகாண மட்டக்களப்பைச் சேர்ந்த  மனித உரிமைகள் செயற்பாட்டாளர் நளினி இரத்தினராஜா கூறுகிறார். பைடனின் தேர்தல் விஞ்ஞாபனத்தில்  ஜனநாயகத்துக்கான உலக உச்சிமகாநாடு குறித்தும் எதேச்சாதிகாரத்தை எதிர்ப்பது குறித்தும் கூறப்பட்டிருக்கிறது. இது நம்பிக்கையூட்டுவதாக இருக்கிறது என்று கூறிய நளினி, அதேவேளை, இலங்கையில் நீதியை வேண்டி நிற்போருக்கு எந்த மாற்றத்தை இது கொண்டுவரப்போகிறது என வெளிப்படுத்தினார்.

  ஜோ பைடனும் கமலா ஹரிஸும் யேமன், சிரியா அல்லது ஆப்கானிஸ்தானில் போர்களை ஆதரிப்பதில் எந்தப் பிரச்சினையையும் கொண்டிராத ஆட்சியதிகார வர்க்கத்தின் ஒரு அங்கமாக இருந்தவர்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. வேறு நாடுகளில் போர்களை தீவிரப்படுத்திக்கொண்டு இலங்கையில் எவ்வாறு சமாதானத்தையும் நீதியையும் ஏற்படுத்த முடியும்? என்று கேள்வியெழுப்பும் அவர்  நம்பகத்தன்மையானதாக தோன்ற வேண்டுமானால், பைடன் நிருவாகம் சிக்கலான கேள்விகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டார்.

 " ஒருவர் பெண்ணாகவும் அல்லது தமிழ் வேர்களைக் கொண்டவராகவும் இருக்கிறார் என்பதற்காக இலங்கையில் நீதிக்கான தமிழர்களின் கோரிக்கைகளை ஆதரிப்பார் அல்லது முற்போக்கான பெண்ணியக்கொள்கையை பின்பற்றுவார் என்று இல்லை என்பதையும் எமது மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். அவர்கள் அதிமுதன்மையாக  அமெரிக்காவின்  பொருளாதார மற்றும் மூலோபாய நலன்கள் மீதே பற்றுறுதி கொண்டவர்களாக இருப்பார்கள் " என்று கூறியிருக்கும் நளினி, சர்வதேச தலையீட்டை நாடுகின்ற அதேவேளை அதற்கு சமாந்தரமாக உள்நாட்டில் ஜனநாயக ரீதியாக எவ்வளவோ நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியிருக்கிறது என்றும் கூறினார்.

  " இலங்கையில் நாம் ஜனநாயகத்தை பெறவேண்டுமானால், போரின் இறுதிக்கட்டத்தில் பாரதூரமான அநீதியான செயற்பாடுகளினால் பாதிக்கப்டட மக்கள் அரச ஒடுக்குமுறையினால் இலக்குவைக்கப்படும் விளிம்புநிலை சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுடன் சேர்ந்து செயற்படவேண்டும். நாட்டுக்குள் நாம் ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும்போது மாத்திரமே சர்வதேச நெருக்குதல் எதுவும் பயன்தரக்கூடியதாக இருக்கும் " என்பது அவரின் உறுதியான அபிப்பிராயம்.

( The Hindu)