நாடு எதிர்கொண்டுள்ள கொரோனா  அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் சில பகுதிகள் பகுதியளவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது சில பகுதிகளில் தனிமைப்படுத்தல் நிலைமை தளர்த்தப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் கொவிட்-19 பரவல் எதிர்வரும் காலங்களில் குறைவடையலாம் என தொற்று நோயியல் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த விடயத்தை இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த அதன் பிரதான வைத்தியர் சுதத் சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது மேற்கொள்ளப்படுகின்ற பரிசோதனைகளின் அடிப்படையில், கொரோனா வைரஸை பரப்புகின்ற நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்திருக்கின்றமையை அவதானிக்க முடிகிறது.

அத்தோடு,  நோயாளர்களுக்கு மேற்கொள்ளப்படுகின்ற பி.சி.ஆர்.பரிசோதனைகளில், அவர்களது மாதிரிகளில் கொரோனா வைரஸின் செறிமானம் குறைவாக உள்ளமையும் தெரியவந்துள்ளது.

இதன்மூலம் எதிர்வரும் காலத்தில் கொழும்பு மாநகரசபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கொவிட் 19 நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளமை முக்கிய அம்சமாகும். .