இலங்கை கிரிக்கெட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரர் நிக் போதஸ் நியமிக்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

நிக் போதஸ் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதியில் இருந்து இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பெறுப்பேற்பார்.

42 வயதான நிக் போதஸ், தென்னாபிரிக்க அணியின் விக்கெட் காப்பளரும் துடுப்பாட்ட வீரரும் ஆவார். 

கடந்த 2011 ஆம் ஆண்டு நிக் போதஸ் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார். அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் 11 ஆயிரம் ஓட்டங்களையும் 500 பிடியெடுப்புக்களையும் எடுத்துள்ளார்.

நிக் போதஸின் நியமனம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவிக்கையில்,

அடுத்த உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு இலங்கை அணியை கட்டியெழுப்புவதில் எனது நிர்வாகம் குறிக்கோளுடன் செயற்படுகின்றது.

இவருடைய நியமனத்தின் மூலம் இலங்கை அணிக்கு சிறந்த ஆலோசனையும் களத்தடுப்பு நுணுக்கங்களையும் பெற்றுத் தரும் என நம்புகின்றோம். இது இலங்கை அணிக்கு சாதகமானதாக அமையுமென எதிர்பார்க்கின்றேன்.

கடந்த காலங்களில் எமது அணி வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை வெளிப்படுத்தியிருந்தது. 

நிக் போதஸின் நியமனம், இலங்கை அணியின் களத்தடுப்பிற்கு தேவையான பயிற்சிகளையும் ஊக்கத்தையும் அளிக்குமென அவர் தெரிவித்தார்.