லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு : 20 தொடரின் மூன்றாவது போட்டியின்போது தம்புள்ளை வைக்கிங்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஓஷத பெர்னாண்டோ உபாதைக்குள்ளாகியுள்ளார்.

இதனால் போட்டிகளில் கலந்துகொள்ளாது ஒரு வாரம் ஓய்விலிருக்குமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் நேற்றுமுன்தினம் (28) கண்டி டஸ்கர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது ஓஷத பெர்னாண்டா துடுப்பெடுத்தாடி வரும் வேளையில் உபாதைக்குள்ளானர்.

அதன் பின்னர் எம்.ஆர்.ஐ. பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலேயே, வைத்தியர்கள் குழு அவரை ஒரு வாரம் ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளது.

ஓஷத பெர்னாண்டோவின் பரிசோதனை அறிக்கையில் கணுக்காலை சுற்றியுள்ள திசுக்கள் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

போட்டியின் மூன்றாவது ஓவரை எதிர்கொண்ட போது இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் சிக்கிய ஓஷத பெர்னாண்டோ, காலியில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்யப்பட்டு, தற்போது ஹம்பாந்தோட்டாவில் உள்ள ஷாங்க்ரி-லா ஹோட்டலில் தங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.