இலங்கை வந்த இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில்  நேற்று முன்தினம் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துதல், பாதுகாப்பு ஒத்துழைப்பு, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில்  அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுதல், இலங்கையில் உட்கட்டமைப்பு மேம்பாடு ஆகிய விடயங்கள் தொடர்பில் இருவரும் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

மேலும், இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிக்கும் புதிய பகுதிகளை அடையாளம் கண்டு முதலீடு செய்ய இந்தியா விருப்பம் கொண்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை,  திருப்திகரமான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதியும் இந்திய பாதுகாப்பு ஆலோசகருக்கு தெளிவுபடுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இவற்றுக்கு மத்தியில் இந்தியாவுக்கு எதிரான குரல்களும் குறைந்தபாடில்லை இந்தியாவுக்கு திருமலை எண்ணெய்குதங்களை வழங்கக்கூடாது என ஜே. வி. பி. அடித்துக்கூறிவருகிறது. 

இந்நிலையில்இலங்கையின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் இடை நடுவே கைவிடும் இந்தியா போன்ற நாடுகளை தொடர்ந்தும் நம்பி அவர்களிடம் தங்கியிருக்காது இடை நடுவே எம்மை கைவிட்டு செல்லாத பலமான நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட வேண்டும் என அமைச்சர் உதய கம்மன்பில சபையில் தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை துறைமுகங்களை எமக்கு சாதகமாகப் பயன்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பமாகியுள்ளதாவும் அவர் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் நேற்று  முன்தினம் இராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். 

இதுவரை காலமாக இலங்கை அதன் அமைவிடத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ளாத காரணத்தினால் சிங்கபூர் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் எம்மை விட பலமான நாடுகளாக வளர்ச்சி கண்டுள்ளன. 

எனினும் இனியும் நாம் அதே தவறிழைத்து விடக்கூடாது. எனவே அம்பாந்தோட்டை துறைமுகத்தின் மூலமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் கப்பல்களுக்கான எரிபொருள் சேவையை வழங்கவும், திருகோணமலை துறைமுகத்தை பயன்படுத்தி இந்தியாவினூடாக மேற்கு -கிழக்கு நோக்கி பயணிக்கும் கப்பல்களுக்கான எரிபொருள் சேவையை வழங்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்

அதேபோல் விமானங்களுக்கு எரிபொருள்  வழங்குதல் மற்றும் கனியவள தேவைகளை பூர்த்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம். இதில் பல இடங்களில் நாம் தவறிழைத்துவிட்டோம் என்று கூறிய அமைச்சர், குறிப்பாக 2010 ஆம் ஆண்டில் இந்தியாவுடன் நாம் இது குறித்த இணைந்த செயற்பாடுகளை முன்னெடுக்க ஆரம்பித்த வேளையில் அவர்களின் நிதி பற்றாக்குறை காரணமாக இடைநடுவே விலகிக் கொண்டனர். எனவே நாம் இந்தியாவை மாத்திரம் நம்பி அவர்களில் தங்கியிருக்க்கூடது என்று கூறியுள்ளார்

இந்நிலையில் இலங்கை ஒருபுறம் இந்தியாவுடன் நெருங்கி செல்லும் தோற்றப்பாடும் மறுபுறம் சற்று ஒதுங்கிச்செல்லும் தோற்றப்பாடும் காட்டப்படுவதாகவே தெரிவதாக கூறப்பட்டு வரும் நிலையில்  இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை தொடர்பில் உறுதியான நிலைப்பாடு அவசியம்.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்