(எம்.எப்.எம்.பஸீர்)

குருநாகல் மாவட்டம், நிக்கவரட்டிய – கொபேகனை பகுதியில் டிப்பர் ரக லொறியால் மோதி பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.  இச்சம்பவம் இன்று அதிகாலை 12.05 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் சுமார் 10 மணி நேரத்தின் பின்னர் சம்பவம் தொடர்பில்  டிப்பர் வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

நிக்கவரெட்டிய பகுதியில் வைத்து சந்தேகநபர் இன்று முற்பகல் 11.30 மணியளவில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன  வீரகேசரிக்கு தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் அறிய முடிவதாவது,

 தெதுரு ஓயா ஆற்றில் முன்னெடுக்கப்படும் சட்ட விரோத மணல் அகழ்வுகளால் பாரிய சூழல் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

இந் நிலையில் இது தொடர்பில் சூழலியலாளர்கள் உயர் நீதிமன்றில் விஷேட வழக்குத் தாக்கல் செய்திருந்த நிலையில், சட்ட விரோத மணல் அகழ்வுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு நீதிமன்றம் கட்டளையும் பிறப்பித்ததுடன், முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை உயர் நீதிமன்றுக்கு அறிவிக்கவும் உத்தரவிட்டிருந்தது.

 இதனையடுத்து தெதுரு ஓயாவில் சட்ட விரோத மணல் அகழ்வுகள் இடம்பெறும் பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அப்பகுதிகள் உள்ள கொபேய்கனை, நிக்கவரட்டிய பொலிஸ் பிரிவுகள் உள்ளிட்டவற்றுக்கு  பொலிஸ் மா அதிபரால் சுற்றிவளைப்புக்கான விஷேட சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டிருந்தது.

 அதன்படி அவ்வப்போது சட்ட விரோத மணல் அகழ்வுகள் தொடர்பிலான சுற்றி வளைப்புக்கள் இடம்பெற்று வந்தன.

 நிக்கவரட்டிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் தகவல்கள் படி, குறித்த சுற்றறிக்கை பிரகாரம் முன்னெடுக்கப்படும் சுற்றிவளைப்புக்காக, நேற்று நள்ளிரவும், கொபேகனை பொலிஸ் நிலையத்தில் குழுவொன்று சென்றுள்ளது.

கொபேகனை பொலிஸ் பிரிவின் ஹாத்தலவ பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தலை சுற்றிவளைப்பதற்காக 05 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்வாறு சென்றுள்ளனர்.

பொலிஸார் அங்கு சென்ற போது,  சட்ட விரோத மணல் கடத்தலுடன் தொடர்புடைய  டிப்பர் ஒன்று முன்னோக்கி வந்துள்ளது.

இதன்போது 32 வயதான ரத்நாயக்க எனும் பொலிஸ் கான்ஸ்டபிள், மணல் டிப்பரை நிறுத்த முயன்ற போது, லொறியை சாரதி நிறுத்தாமல் நிறுத்துமாறு சமிக்ஞை செய்த பொலிஸ் கான்ஸ்டபிளை மோதியவண்ணம் தப்பிச் சென்றுள்ளார்.

 சம்பவத்தில் பலத்த காயமடைந்த 32 வயதான பொலிஸ் கான்ஸ்டபிள் நிக்கவெரட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, உயிரிழந்திருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். நிக்கவரட்டிய, ரஸ்நாயக்கபுர பகுதியைச் சேர்ந்த இரு பிள்லைகளின் தந்தையான பொலிஸ் காண்ஸ்டபிளே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 இந் நிலையில் சம்பவம் தொடர்பில் விஷேட விசாரணைகள் நிக்கவரட்டிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் உபுல் சந்தனவின் கட்டுப்பாட்டில், கொபேகனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பண்டார ஜயதிலக உள்ளிட்ட குழுவினரும், நிக்கவரட்டிய வலய குற்றத் தடுப்புப் பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்தனர்,.

 இந் நிலையிலேயே, நேற்று முற்பகல், கான்ஸ்டபிளை மோதிக் கொன்றுவிட்டு தப்பிச் சென்ற லொறி, குளியாபிட்டிய நகரிலிருந்து இரு கிலோமீற்றர் தூரத்தில் வைத்து கைவிடப்பட்டிருந்த நிலையில் பாதையோரத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரை நிக்கவரட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழு, நிக்கவரட்டியில் வைத்து கைது செய்தது.

 இந் நிலையில் சந்தேக நபரிடம் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே குறித்த சந்தேக நபர், சட்ட விரோத மரக் கடத்தல் உள்ளிட்ட விடயங்களுக்கு குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது. 

இதனால்   குறித்த நபரின் லொறியொன்று அரசுடமையாக்கப்பட்டுள்ளதுடன், மேலும் இரு சட்ட விரோத மணல் கடத்தல் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பிலான வழக்குகளும் நிக்கவரட்டி நீதிமன்றில் நிலுவையில் உள்ளமையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

  இந் நிலையிலேயே சந்தேக நபருக்கு எதிரான குறித்த சட்ட விரோத நடவடிக்கைகளின் போதான சுற்றி வலைப்பில், இன்று அதிகாலை டிப்பரால் மோதி கொலை செய்யப்பட்ட கான்ஸ்டபிள் பிரதான பங்களிப்பினை கொண்டிருந்ததாக கூறும் பொலிஸார், அதனை மையப்படுத்தி வேண்டுமென்ணறே அவரை டிப்பரால் மோதியிருக்க வேண்டும் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

 இவ்வாறான பின்னனியிலேயே கைது செய்யப்பட்ட  சந்தேக நபருக்கு எதிராக,  தண்டனை சட்டக் கோவையின் 296 ஆவது அத்தியாயத்தின் கீழ், மனிதப் படு கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

 உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிளின் பிரேத பரிசோதனைகள் இன்று குருணாகல் போதனா வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.