மதிப்புக்குரிய கமலா ஹரிஸ் அவர்களுக்கு,

யார் இந்த கமலா ஹரிஸ் ? | Virakesari.lk

     

      முதலில் உங்களுக்கு  எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அமெரிக்க அரசியலில் நீங்கள் பெரிய சாதனையைப் படைத்திருக்கிறீர்கள். முதல் பெண் துணை ஜனாதிபதி என்பது ஒருபுறமிருக்க, எமது அயலகமான தமிழகத்தில் பூர்வீத்தைக் கொண்ட ஒருவர் உலகின் பெரிய வல்லரசின் இரண்டாவது பெரிய தலைவியாக நீங்கள் ஜனவரியில் பதவியேற்கப்போகிறீர்கள். 

   நீங்கள் இரண்டு தலைமுறைக்கு முன்னதாக அமெரிக்காவில் குடியேறிய ஒரு குடும்பத்தில் இனக்கலப்பில் பிறந்த பெண்மணி. ஆனாலும் தமிழக இரத்தம் உங்களில் ஓடுகிறது என்பதால் உலகம் பூராகவுமுள்ள தமிழர்கள் தங்களுடைய ஒரு மகள் அமெரிக்க துணை ஜனாதிபதியாக  பதவியேற்கப்போகிறார்  என்று மகிழ்ச்சியடைகிறார்கள்.

   தமிழகத்திலும் இலங்கையிலும் தமிழர்கள் மத்தியில் பூரிப்பைப் பற்றி சொல்லத்தேவையில்லை. மன்னார்குடி பிராமணப்பொண்ணு இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த  சாதனையை படைத்தவிட்டதாக தமிழகத்தில் ஒரே குதூகலம். 

    நீங்கள் ஜோ பைடனால் அவரது உடன் போட்டியாளராக தெரிவு செய்யப்பட்ட நாள் முதல் தேர்தல் வரை உங்கள் தாய்வழிப் பாட்டனாரின்  பூர்வீக கிராமத்திலும் அயல் கிராமங்களிலும் உங்கள் வெற்றிக்காக ஆலயங்களில் தினமும் மக்கள் பிரார்த்தனை செய்தார்கள். 

   வீதிகளில் உங்களது பெரிய ' கட் அவுட்கள்' , பதாதைகள் என்று  பெரிய அமர்க்களம். தேர்தல் வெற்றியையும் பட்டாசு வெடித்தும் வண்ணக்கோலங்கள் வரைந்தும்  அந்த கிராமங்களில் மாத்திரமல்ல, தமிழகத்தின் பல பாகங்களிலும் கொண்டாடினார்கள்.

   தேர்தல் பிரசாரங்களின்போது உங்களின் இந்த முன்னேற்றங்களுக்கு எலலாம் காலஞ்சென்ற உங்கள் தாயாரே ஊக்கம் தந்ததாக கூறினீர்கள். அப்போது உங்கள் தாயாரின் சகோதரிகளைப் பற்றியும் கூறினீர்கள். 'சித்திகள் ' என்று நீங்கள் குறிப்பிட்டதை அறிந்து ' ஆகா... கமலா ஹரிஸ் தமிழ் பேசுகிறார் ' என்று தமிழகத்தில் பெருமைப்பட்டார்கள். உங்களுக்கு இட்லி, தோசையில் நல்ல விருப்பம் என்று செய்திகள் வந்தவேளையிலும் இவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்.

    இதையெல்லாம் நீங்கள் முழுமையாக அறியாவிட்டாலும் ஓரளவுக்கு தெரிந்துகொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், உங்களை தங்கள் மகளாகக் கொண்டாடும் இந்த மக்களுக்கு நீங்கள் நன்றி தெரிவித்து ஒர செய்தியை வெளியிட்டதாக நான் அறியவில்லை.

  அது ஒருபுறமிருக்க, இலங்கையில் தமிழர்களில் ஒரு பிரிவினர் ' அரைத் தமிழிச்சி ' யான நீங்கள் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக   பதவியேற்பதால் பைடன் நிருவாகம் எமது  இனப்பிரச்சினையிலும் மனித உரிமைகள் விவகாரங்களிலும்  தமிழர்களுக்கு அனுகூலமான ஒரு  நிலைப்பாட்டை எடுக்கக்கூடும் என்று நம்புகிறார்கள்.

அண்மையில் கொழும்பு தமிழ் பத்திரிகையொன்றில் அரசியல் ஆய்வாளர் என்று கூறிக்கொண்டு கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும் ஒருவர் " கமலா ஹரிஸை தமிழ்த்தேசியத்துக்குள் உள்வாங்க தமிழர் தரப்பு முயற்சிகளில் ஈடுபடவேண்டும் " என்று கூறியிருந்தார். அதைப்படித்ததும் அவர் எந்த உலகில் வாழ்கிறார் என்று வியந்தேன்.

     சிலர் உங்களது பாட்டனாருக்கு யாழ்ப்பாணப் பூர்வீகம் இருப்பதாகவும் கூறினார்கள். சில பத்திரிகைகளும் அதை பரபரப்பான செய்தி என்ற மருட்சியில் முக்கியத்தவம் கொடுத்து பெரிய செய்தியாக வெளியிட்டன. 

    பிறகு உங்கள் தாய்வழி மாமனார் கோபாலன் பாலச்சந்திரன் புதுடில்லியில் இருந்து எமது பத்திரிகையொன்றுக்கு வழங்கிய பேட்டியில் தங்கள் குடும்பத்துக்கு  யாழ்ப்பாணப் பூர்வீகம் எதுவும் கிடையாது, தாங்கள் முழுநிறைவான இந்தியர்களே என்று கூறி கதையை முடிவுக்கு கொண்டுவந்தார்.

   தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரான முதுபெரும் அரசியல்வாதி சம்பந்தன் ஐயாவும் நீங்கள்  துணை ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டது நம்பிக்கையை தருகிறது என்று பத்திரிகைகளில்  அறிக்கை வெளியிட்டிருந்தார்.

     உங்களுக்கு இலங்கை தமிழர் பிரச்சினையைப் பற்றி ஏதாவது தெரியுமா? சரி இனிமேலாவது தெரிந்துகொணடாலும் இலங்கையில் இன உறவு நிலைவரங்களில் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு செல்வாக்கை செலுத்தமுடியுமா? அதில் அக்கறை காட்டுவதற்கு உங்களுக்கு தேவை இருக்குமா? போதாக்குறைக்கு யாழ்ப்பாணத்தை சேர்ந்த  டாக்டர் ஒருவரின் புதல்வியை உங்கள் தலைமை அதிகாரியாக தெரிவுசெய்திருப்பதனால், எமதுபிரச்சினையில் நீங்கள் அக்கறை காட்டுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும் என்றும் கூட நம்மவர்களில் சிலர் நம்புகிறார்கள். 

இப்படியான அசட்டுப் பெருமைகளில் அர்த்தம் இல்லை என்பதை நம்மவர்களில் பெரும்பகுதியினர் ஒருபோதும் உணரமாட்டார்கள் எனறே தோன்றுகிறது.

   

இந்தியாவில் இருந்து மருத்துவ உயர்கல்வி படிக்க இளம் வயதில் வந்த உங்கள் தாயார் பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொண்டிருந்தபோதே கறுப்பினத்தவர்களுக்கு எதிரான பாகுபாடுகளுக்கு எதிரான இயக்கங்களில் பங்கேற்றவர். அவரின் செல்வாக்கே உங்களையும் மனித உரிமைகள் விவகாரங்களில் அக்கறை காட்டவைத்தது என்று செய்திகளில் படித்தேன்.

   ஆனால், அண்மையில் 'டைம்' சஞ்சிகையில் உங்களைப் பற்றிய கட்டுரையொன்றை படித்தேன். அதில் கூறப்பட்டிருப்பவை உங்களின் மறுபக்கத்தை காட்டுவதாக நான் சிந்தேகிக்கிறேன். அந்த தகவல்கள் தவறானவையா செம்மையானவையா என்பதும் எனக்கு தெரியாது. ஆனால், உள்ள தகவல்கள் பாரதூரமானவை.

   அதாவது சான்பிரான்சிஸ்கோவில் மாவட்ட சட்டமா அதிபராகவும் பின்னர் கலிபோர்னியா மாநில சட்டமா அதிபராகவும் நீங்கள் பதவிவகித்த வேளைகளில் நீங்கள் எடுத்த பிற்போக்கான நிலைப்பாடுகள் காரணமாக சாதாரண மக்களக்கு உங்களைப் பிடிக்காதாம். அடித்தள மக்களுக்கு குறிப்பாக, கறுப்பின மக்களுக்கு ஆதரவான சட்டங்கள் இயற்றப்படுவதற்கு நீங்கள் எதிராக இருந்தீர்களாம்.

   மாணவர்கள் மும்முறை அவர்களின் பாடவகுப்புகளில் சுமார் 30 நிமிடங்கள் வரை வராமலிருந்தால் அவர்களை (தண்டனைக்குரிய சிறு குற்றங்களைச் செய்த ) குற்றவாளிகளாக்கும் சட்டத்தை நீங்கள் ஆதரித்தீர்கள் மரிஜூவானா போதைப்பொருளை பழக்கமாக இல்லாமல் எப்போதாவது கொண்டாட்டங்களின்போது அதைப்பாவிப்பதை பெருங்குற்றமாக ஆக்கப்படக்கூடாது என்கிற கருத்து சட்டமாக்கப்படுவதை எதிர்த்தீர்கள்.  மரணதணடனையை ரத்துச் செய்யும் சட்டவாக்க முயற்சியை தொடர்ச்சியாக எதிர்த்துவந்திருக்கிறீர்கள்.  கறுப்பினத்தவர்கள் இருவர் பொலிசாரினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டபோது  அது குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் நீங்கள் நிராகரித்தீர்கள். அமெரிக்க அரசியலில் சுகாதாரக் காப்புறுதி என்பது முக்கியமான ஒன்று. அது குறித்து  நீங்கள் ஒருபோதும் நிலையான கருத்தை முன்வைத்ததில்லை - இவ்வாறு அதில் கூறப்பட்டிருக்கிறது.

    இவையெல்லாம் உங்களைப்பற்றி மங்கலான ஒரு படிமத்தையே தோற்றவிக்கின்றன. துணை ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு  முன்னைய நிலைப்பாடுகளை கணிசமானளவுக்கு மாற்றிக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

இப்படிக்கு 

ஊர்சுற்றி