உள்ளக பொறிமுறை விடயத்தில் இன்னும் காலதாமதம் வேண்டாம்

Published By: J.G.Stephan

29 Nov, 2020 | 07:20 PM
image

யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் சர்வதேச மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் பொறிமுறை முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற விடயம் இலங்கையைப் பொறுத்தவரையில் தொடர்ந்து எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.

பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ச்சியாக தமக்கான நீதிக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்ற சூழலிலும் போராடிக் கொண்டிருக்கின்ற நிலையிலும் அதிகாரத்தில் இருக்கின்ற தரப்பினர் அது தொடர்பில் சிந்திக்காத நிலைமை நீடித்துக் கொண்டிருக்கின்றது.

இந்த விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் ஆறுக்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள சூழலில் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் ஏனைய சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் இதுதொடர்பில் வலியுறுத்தி வருகின்ற நிலையிலும் எந்தவிதமான முன்னேற்றமும்  இல்லை.  

அதுமட்டுமன்றி தற்போது நடைமுறையில் இருக்கின்ற 40/1 என்ற பிரேரணை எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவா மனித உரிமை பேரவையில் முடிவுக்கு வருகின்ற சூழலில் அடுத்து என்ன நடக்கும் என்ற ஒரு கேள்வியும் சர்வதேச மட்டத்திலும் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியிலும் காணப்படுகிறது. அதுவும் அரசாங்கம் அந்த பிரேரணையிலிருந்து விலகியுள்ள சூழலிலேயே மார்ச் மாதம் என்ன நடக்கப் போகிறது என்ற ஒரு கேள்வி எழுகின்றது.

இவ்வாறான கட்டத்தில் கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல இலங்கை அரசாங்கம் ஜெனிவா  தீர்மானத்திலிருந்து இருந்து விலகியுள்ளதால் மீண்டும் ஒரு பிரேரணை அடுத்த வருடம் மார்ச் மாதம் ஜெனிவாவில் முன்வைக்கப்படும் என்றும் இதுதொடர்பாக பிரிட்டன் பாராளுமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அறிவித்திருக்கிறார்.

அதுமட்டுமன்றி அரசாங்கம் இலங்கை தொடர்பான ஜெனிவா  பிரேரணையிலிருந்து விலகியுள்ளதால் பாரிய சர்வதேச நெருக்கடிகளை சந்திக்க வேண்டி ஏற்படும் என்ற எச்சரிக்கையையும் எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வெளியிட்டிருக்கிறார்.  இந்த விடயங்கள் அரசாங்கத்தினால் மிக ஆழமாக ஆராயப்பட வேண்டியது என்பது தெளிவாக தெரிகிறது. காரணம் அரசாங்கம் தற்போது அதிகரித்து வருகின்ற சர்வதேச நெருக்கடிகளில் இருந்து விடுபடவேண்டுமாயின் நிச்சயமாக பாதிக்கப்பட்ட மக்கள் திருப்தியடையக் கூடிய வகையில் உள்ளக பொறிமுறையை முன்னெடுப்பது மிகவும் அவசியமாகும்.

அதாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதற்கு பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க பொறிமுறையை சுயாதீனமான முறையில் மற்றும் நம்பகரமான வழியில் முன்னெடுக்க வேண்டும்.

இந்த சூழலில் ஜெனிவாவில் மற்றுமொரு பிரேரணையை கொண்டு வருவதற்கான முயற்சியில் சர்வதேச சமூகமும் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளும்  ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். முக்கியமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து நாட்டின் தூதுவரை சில தினங்களுக்கு முன்னர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அதேபோன்று சில வாரங்களுக்கு முன்னர் பிரிட்டன் உயர்ஸ்தானிகரையும்  சுமந்திரன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதை காணமுடிந்தது.

இதேவேளை தற்போது எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ள கருத்துக்களை  பார்க்கும்போது பிரிட்டன் உள்ளிட்ட சர்வதேச நாடுகள் புதியதொரு பிரேரணையை இம்முறை ஜெனிவாவில் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அரசாங்கம் அதனை நிராகரித்தாலும்கூட ஜெனிவா மனித உரிமை பேரவையில் குறித்த பிரேரணை கொண்டுவரப்படும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த  தீர்க்கமான கட்டத்தில்  அரசாங்கமானது உள்ளக பொறிமுறை ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பது ஆரோக்கியமாகவே அமையும். இதன் ஊடாக பல்வேறு நன்மைகள் இலங்கைக்கு கிடைக்கும் என்பதே யதார்த்தமாகும். அதாவது சர்வதேச மட்டத்திலும் இலங்கைக்கு ஒரு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதுடன் உள்நாட்டிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைத்ததாக இருக்கும்.

மாறாக இந்த  விடயத்தில் எதுவும் செய்யாமல் இழுத்தடித்துக் கொண்டு பயணிப்பது பாதிக்கப்பட்ட மக்களை விரக்தி நிலைக்கு கொண்டு செல்லும் என்பதுடன் சர்வதேச ரீதியிலும் நாட்டுக்கு நெருக்கடிகள் ஏற்படும் நிலை உருவாகலாம். இவ்வாறான நெருக்கடிகளை தவிர்க்க வேண்டுமாயின் இலங்கை அரசாங்கம் ஒரு உள்ளக விசாரணை பொறிமுறையை முன்னெடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதற்கும் அந்த உள்ளக பொறிமுறையை நம்பகரமாகவும் சுயாதீனமாக முன்னெடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும.

மாறாக சர்வதேச சமூகத்தின் கோரிக்கையை கவனத்தில் எடுக்காமல் செயல்படும் பொழுது சர்வதேச நெருக்கடிகள் ஏற்படும் சாத்தியம் காணப்படுகிறது. முக்கியமாக பொருளாதாரத் தடைகள் குறித்து ஒரு பேச்சுவார்த்தைகள் கடந்த காலங்களில் வெகுவாக காணப்பட்டன. அத்தடன்  ஐரோப்பிய ஒன்றத்தின்  ஜி.எஸ்.பி.  பிளஸ் சலுகை ஐரோப்பிய ஒன்றியத்தினால் நிறுத்தப்பட்டு மீண்டும் 2015ஆம் ஆண்டுக்கு பின்னரே  வழங்கப்பட்டது.

கடந்தகாலம் முழுவதும் உள்ளக விசாரணையை முன்னெடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதாக அரசாங்கம் தெரிவித்து வந்தது. யுத்தம் முடிந்ததன் பின்னர் பதவில்  இருந்த சகல அரசாங்கங்களும் இந்த வாக்குறுதியை வழங்கி வந்தன. ஆனால் பதினொரு வருடங்கள் கடந்துவிட்ட பின்னரும் இதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்று கொடுக்கப்படவில்லை. அதனால்தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளக பொறிமுறையில் நம்பிக்கை இல்லாத தன்மை ஏற்பட்டதுடன் சர்வதேச தலையீட்டை கோரி வருகின்றனர். எனவே நம்பகமான முறையில் சுயாதீனமான விரிவான ஒரு உள்ளக விசாரணையை முன்னெடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க முடியுமானால்     சர்வதேச   நெருக்கடிகளை குறைப்பதற்கு ஏதுவாக அமையும்.  

இந்நிலையில் இது போன்ற நெருக்கடிகள் மீண்டும் ஏற்படும் சாத்தியம் இருக்கும் என்பதை எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் எச்சரிக்கையாக வெளியிட்டிருக்கிறார்.  இந்த நிலைமையை அரசாங்கம் கவனத்தில் கொண்டு  பாதிக்கப்பட்ட  நாட்டு பிரஜைகளுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை  எடுக்க வேண்டும். இந்த விடயத்தில் இன்னும் தாமதம் ஏற்படுவது ஆரோக்கியமானதல்ல.  

பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க செயற்டை்டை நம்பகமான முறையில் முன்னெடுக்கும் பட்சத்தில் நிச்சயம் சர்வதேசத்தின் ஆதரவையும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் உள்நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுத்து அவர்களின் வாழ்க்கையிலும் ஒரு புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்த முடியும் என்பதே யதார்த்தமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04