சுமந்திரனின் மாற்றம்...

Published By: J.G.Stephan

29 Nov, 2020 | 03:57 PM
image

-கபில்

“ஆயுதப் போராட்டத்தை, ஆதரிக்கவில்லை என்று கூறிவந்த- அந்த வழிமுறையை நிராகரிப்பதாக கூறிவந்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நினைவேந்தல் களத்துக்கு வந்தமை ஆச்சரியமான மாற்றம் தான்”

மாவீரர் நாள் நினைவேந்தல் கடந்த பல ஆண்டுகளைப் போலன்றி, இந்தமுறை மீண்டும், வீட்டு முற்றங்களுக்குள்ளேயோ, அல்லது வீடுகளுக்குள்ளேயோ முடக்கப்பட்டிருக்கிறது. 2009இல் இருந்து- விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், போராட்டம் சார்ந்த நினைவேந்தல் நிகழ்வுகளைப் பகிரங்கமாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

ஆங்காங்கே சிலர் உதிரிகளாக நினைவேந்தல்களை நடத்தினாலும், அவை கூட்டுத் திரட்சியாக இருக்கவில்லை. 2015    ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் தொடங்கி, 2019 ஆட்சி மாற்றத்துக்கு இடையில் கிடைத்த ஜனநாயக வெளிக்குள், மாவீரர்நாள் நிகழ்வுகள் பகிரங்கமாக- அரசபடைகளால் இடித்தழிக்கப்பட்ட துயிலுமில்லங்களிலேயே நடத்தப்பட்டன.

அது தமிழ் மக்களில் பெரும்பாலானோருக்கு ஒரு ஆறுதலை கொடுத்தது.  குறிப்பாக  உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பைக் கொடுத்தது.

தோல்விச் சுமைக்குள் நீண்ட நாட்களாக முடக்கப்பட்டிருந்த மக்களுக்கு, அதிலிருந்து வெளியேறும் மிடுக்கையும் தந்தது. 2015 ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும், மாவீரர் நாளை துயிலுமில்லங்களில் தலைமை தாங்கி நடத்த முயன்ற பின்னர் தான், எல்லோரும் அவர்களுக்குப் பின்னால் சென்றார்கள்.

அந்த இடத்தில்அவர்கள் அவ்வாறு முன்னேசெல்ல வேண்டியது தவிர்க்க முடியாததாக இருந்தது. எனினும்,அப்போது கடும் விமர்சனங்களையும் அவர்கள் எதிர்கொள்ள நேரிட்டது. அந்த விமர்சனங்களுக்குப் பின்னர், துயிலுமில்லங்களில் அவர்கள் பெரும்பாலும் ஒதுங்கி நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இப்போது மீண்டும், அவர்களை முன்னிலைப்படுத்த வேண்டிய நிலை பலருக்கும் ஏற்பட்டுள்ளது.

இந்தமுறை மாவீரர் நாள்நினைவேந்தல் செயற்பாடுகள் சார்ந்த முக்கியமான மாற்றங்களில் ஒன்றாக அவதானிக்கப்படுவது, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் செயற்பாடு தான். இந்த நினைவேந்தல் விடயத்தில்,பொலிசாரும், இராணுவத்தினரும், அரசாங்கமும் எவ்வாறு செயற்படுவார்கள் என்பது நன்றாக அறியப்பட்ட விடயம் தான்.

நினைவேந்தலுக்கு எதிராக- அதனைத் தடுக்கின்ற வகையிலான நிலைப்பாட்டை அவர்கள் எடுப்பார்கள் என்பது உறுதியாகவே தெரிந்தது. ஆனால்,இதுவரையில், ஆயுதப் போராட்டத்தை, ஆதரிக்கவில்லை என்று கூறிவந்த- அந்த வழிமுறையை நிராகரிப்பதாக கூறிவந்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நினைவேந்தல் களத்துக்கு வந்தமை ஆச்சரியமான மாற்றம் தான்.

தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையைத் தடுக்க முடியாது, மக்கள் துணிந்து, விளக்கேற்றி அஞ்சலி செலுத்தலாம் என்ற அறிக்கையுடன் அவர் ஒதுங்கியிருக்கவில்லை. தானாக வந்து, நீதிமன்றங்களில் முன்னிலையாகி தடைகளுக்கு எதிராக வாதிட்டார். ஆனாலும், அவரால், நீதிமன்றக் கட்டளைகளை மாற்ற முடியாமல்போனது. 

இது அவர் ஒரு சட்டத்தரணியாக செய்த வேலைதான். சுமந்திரன் விடுதலைப் புலிகளின் போராட்டத்தை ஆதரிக்காவிட்டாலும், சட்டத்தரணியாக விடுதலைப் புலிகளின் போராளிகள் பலரையும் நீதிமன்றங்களில் வாதாடி விடுவித்திருக்கிறார். 

அதுபோன்று, தொழில்சார் முறையில்தான் அவர்,வழக்குகளின் முன்னிலையானாரே தவிர, உணர்வு ரீதியான விருப்புடன் வரவில்லை என்று கூறுபவர்களும் உள்ளனர். எது எவ்வாறாயினும், இத்தகைய விமர்சனங்களைக் கடக்கும் வகையில்தான், சுமந்திரன், கடந்த21ஆம் திகதி கப்டன் பண்டிதரின் இல்லத்தில் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தியிருந்தார். இது தமிழ் அரசியல் பரப்பில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

சுமந்திரன் அரசியலுக்கு வந்த பின்னர், நினைவேந்தல் நிகழ்வுகள் எதிலும் பங்கேற்கவில்லை. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்களில் கூட, அவர் காணப்படவில்லை. அவ்வாறான ஒருவர் மாவீரர் ஒருவரின் இல்லத்துக்குச் சென்று, தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தியதுடன், அந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களையும் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார்.

இந்த நிகழ்வை அவர் மறைக்க விரும்பவில்லை, அதனை வெளிப்படுத்த வேண்டும் என்று தான் நினைத்திருக்கிறார். இதன் ஊடாக அவர், ஏதோசில செய்திகளை கூற முனைந்திருக்கிறார் என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும்.

சுமந்திரனின் மீது வெறுப்படைந்திருந்த பலருக்கும், அவரது இந்த நடவடிக்கை இன்னும் சீற்றத்தை ஏற்படுத்தியது. வேறு சிலருக்கு அச்சத்தையும் ஏற்படுத்தியது. ஏனென்றால், அவர் இதனை ஒரு அரசியல் உத்தியாகப் பயன்படுத்த முனைகிறாரா என்ற சந்தேகம் அவர்களுக்கு உள்ளது.

நினைவேந்தலுக்கான உரிமை தமிழ் மக்களுக்கு உள்ளது என்று சுமந்திரன் அறிக்கை வெளியிட்ட போது, அவர் அறிக்கை வெளியிட்டுவிட்டு ஒதுங்கியிருக்காமல், முன்னால் வந்துதானும் பங்கெடுத்து மக்களுக்கு தெம்பூட்டவேண்டும் என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியிருந்தார்.

ஆனால், கப்டன்பண்டிதரின் வீட்டில் அஞ்சலி செலுத்திய பின்னர், ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக்கொள்ளாத சுமந்திரன், மாவீரரின் நினைவேந்தலுக்கு வந்ததை கேள்விக்குட்படுத்தினார்.

இதுபோன்ற அரசியல் தர்க்கங்களுக்கு மத்தியில் சுமந்திரனின் மாற்றம் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டியஒன்றுதான். அவர், ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக் கொள்ளாவிடினும், தியாகங்களை கொச்சைப்படுத்தவில்லை. இவ்வாறான நிகழ்வுகளில் பங்கேற்று, அரசியல் இலாபத்துக்காக பயன்படுத்த விரும்பவில்லை என்றும் கூறியிருந்தார்.

அந்த நிலையில் இருந்து பார்த்தால், அவர் இப்போது வந்திருப்பது அரசியல் நலனுக்கானதா என்ற கேள்வி எழுகிறது. அதேவேளை, தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்கும் சுமந்திரன், ஒரு முழுமையான தமிழ்த் தேசியவாதியாக இருக்கவில்லை என்று குறைபட்டுக் கொண்டவர்கள், இவ்வாறான நிகழ்வுகளில் பங்கேற்கமுன்வந்து, அதனை நெருங்கி வரும்போது எட்டி உதைக்க முனைவதும் சரியானதா என்ற கேள்விகளும் உள்ளன.

இந்த இடத்தில் அரசியல் நலன்களை சுமந்திரன் எதிர்பார்க்கவில்லை என்று கூறமுடியாது. கடந்தபொதுத்தேர்தலில் சுமந்திரன் கடும் போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கட்சிக்குள்ளேயும், கடும் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது. அதற்குப் பின்னர் அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருக்கலாம். ஆனாலும், தேர்தலுக்குப் பின்னர் கூட அவர், ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை என்று அறிக்கை விட்டு பெரும் சர்ச்சைக்குள் சிக்கியிருந்தார்.

ஆக, தேர்தல் பின்னடைவுகளின் விளைவாக அவர் தன்னை மாற்றிக் கொண்டுள்ளார் என, கருதுவதற்கு இடமில்லை. திலீபன் நினைவேந்தலுக்காக தொடங்கப்பட்ட போராட்டம், மாவீரர் நினைவேந்தலுக்கும் நீடிக்கப்பட்டதன் மூலம், தான் சுமந்திரன் இந்த அரங்கிற்குள் வரும்நிலை ஏற்பட்டது.

சுமந்திரனின் வருகை தனியே, தமிழ் மக்களை கவருவதற்கானதாக மாத்திரம் எடுத்துக் கொள்ள முடியாது. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தைப் பார்த்து, நாடாளுமன்றத்தில் பயங்கரவாதி என்று சரத் பொன்சேகா அடையாளப்படுத்தியது போன்று, சுமந்திரனை அடையாளப்படுத்த முடியாது.

காரணம் அவரது தனிப்பட்ட அரசியல் வழிமுறை அவ்வாறானது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கடும்போக்கை வெளிப்படுத்துபவர், சுமந்திரன் மென்வலு அரசியல் செய்பவர். ஆனாலும், அவரையும் கடும்போக்கு அரசியலை நோக்கித்திரும்பும் நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது அரசாங்கம். இதுதான், ராஜபக்ஷ அரசாங்கத்தின் ஒரு வருட சாதனையா?

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22
news-image

சுதந்திரக் கட்சிக்குள் வீசும் புயல்

2024-04-15 18:41:46
news-image

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் முரண்பாடுகள்

2024-04-15 18:37:16
news-image

மலையக மக்களை இன அழிப்பு செய்த ...

2024-04-15 18:33:43
news-image

எதற்காக நந்திக்கடலில் பயிற்சி முகாம்?

2024-04-15 18:27:21
news-image

ஒரே புள்ளியில் அமெரிக்கா - இந்தியா

2024-04-15 18:24:18