-சத்ரியன்

 “தமிழ் மக்களை விடுவித்தோம் என்று கூறுகின்ற அரசாங்கம் அவர்களின் நீண்டகால ஏக்கத்தைப் போக்கியதா?அவர்களுடைய உரிமைகள் வழங்கப்படவில்லை.  அபிலாஷைகளை நிறைவேற்றக் கூடிய அரசியல் தீர்வையும் வழங்கவில்லை. பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கவில்லை” 

பாராளுமன்றத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும், இராஜாங்க அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவுக்கும் கடந்தவாரம் வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது. இதன்போது, சரத் வீரசேகர, இங்குள்ள தமிழ்த் தலைவர்கள் யாருக்கும், தமிழ் மக்களின் உரிமைகள், தேவைகள் குறித்துப் பேசுகின்ற உரிமை கிடையாது என்று கூறியிருந்தார்.

புலிகளின் பிடியில் இருந்த தமிழ் மக்களை தாங்களே காப்பாற்றியதாகவும், அதற்காக ஆயிரக்கணக்கான படையினரை தியாகம் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்

அப்போது, தமிழ் மக்களுக்காக இங்குள்ள தமிழ் தலைவர்கள் குரல் கொடுக்கவில்லை, அவர்களைப் பாதுகாக்க முனையவில்லை,  அவர்களுடன் இருக்கவில்லை, ஓடிஒளிந்துவிட்டனர் என்றும் அவர் தவறான பல தகவல்களை முன்வைத்தார். அதற்குப் பதிலடி கொடுத்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தான் ஓடி ஒளியவில்லை என்றும், மக்களை பாதுகாப்பாக மீட்பது மற்றும் போரை நிறுத்துவது குறித்து பசில் ராஜபக்ஷவுடன் பேசிக்கொண்டிருந்தேன் என்றும்அவர் பதிலளித்திருந்தார்.

அதற்கு முதல்நாள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க  உரையாற்றிய போது, போரின் இறுதிக்கட்டத்தில் கப்பல் கொண்டு வந்து மக்களை மீட்க சக்திவாய்ந்த நாடு ஒன்றின் தூதுவர் முன்வந்த போது,  இன்னொரு நாடு கப்பல் கொண்டு வருவதாக கூறியுள்ளது என்று, கூறி அவர்களை அப்போதைய ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ ஏமாற்றினார் என்றும் பிரபாகரன் தப்பிவிடக் கூடாது என்பதற்காகவே அவர் அவ்வாறு நடந்து கொண்டார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

போர் பிரபாகரனைக் கொல்வதற்காக நடத்தப்பட்டதே தவிர, மக்களை மீட்பதற்காக நடத்தப்படவில்லை. அவ்வாறு மக்களின் மீது கரிசனை கொண்ட- மக்களை மீட்பதற்கு முன்னுரிமை கொடுத்த அரசு என்றால், கப்பல் மூலம் மக்களை மீட்கும் வாய்ப்பை தட்டிக்கழித்திருக்காது.

அந்த வாய்ப்பு தட்டிக்கழிக்கப்பட்ட பின்னர், தான் பிரபாகரனும் இறந்தார், பல்லாயிரக்கணக்கான மக்களும் கொன்று குவிக்கப்பட்டார்கள்.

அதனை ஏற்றுக்கொள்ளும் வகையில் அமைந்திருக்கிறது மனித உரிமைகள் அமைச்சரின் வாக்குமூலம். ஆனால், இதே அரசாங்கம் அங்கம் வகிக்கும், இன்னொரு இராஜாங்க அமைச்சர், தாங்களே தியாகங்களைச் செய்து தமிழ் மக்களை மீட்டதாக உரிமை கோருகிறார். அதற்கும் அப்பால், தமிழ் மக்களின் பிரதிநிதிகளைப் பார்த்து, தமிழ் மக்களின் உரிமைகள், தேவைகள் குறித்து பேசுகின்ற உரிமை உங்களுக்குக் கிடையாது என்கிறார்.

அதுவும், மூன்று மாதங்களுக்கு முன்னர் தான், தேர்தலில் தமிழ் மக்கள் கொடுத்த ஆணையின் பேரில் இவர்கள் பாராளுமன்றம் சென்றிருக்கிறார்கள். தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைப் பார்த்து, தமிழ் மக்களின் தேவைகள் உரிமைகள் குறித்து பேசும் உரிமை இல்லையென்றால், அந்த உரிமை யாருக்கு உள்ளது?

போரில் வெற்றியீட்டிய தமக்கே அந்த உரிமை உள்ளதாக அவர் கருதுகிறார். தாங்கள் உயிரைக் கொடுத்து வென்ற போர், என்ற அதிகாரத்தில் அவர் பேசுகிறார். போரில் வெற்றியீட்டிய இவர்களின் தலைமையை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவ்வாறு ஏற்றுக்கொண்டிருந்தால், ஜனாதிபதி தேர்தலில், கோட்டாபய ராஜபக்ஷவை, சுமார் 90 சதவீதமான தமிழ் மக்கள் நிராகரித்திருக்கமாட்டார்கள்.

அதைவிட, அரசாங்கத்தின் பிரதிநிதிகளே, தமிழ் மக்களால், பாராளுமன்றத்துக்கும் தெரிவு செய்யப்பட்டிருப்பார்கள். அதைவிட, போர் நடந்து கொண்டிருந்தபோது, தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் மக்களுடன் இருக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியிருந்தார் சரத் வீரசேகர.

போரின் இறுதி நாட்களில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு இருக்கவில்லை. அவர்களால் கொழும்பிலோ, தமது பகுதிகளிலோ வாழக்கூடிய நிலை இருக்கவில்லை. பலர் துரத்தி துரத்தி சுடப்பட்டார்கள். அவர்கள் உயிருக்குப் பயந்து நாடுநாடாக ஓடிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களில் பலர் வெளிநாடுகளில் தஞ்சமடையவும் நேரிட்டது. பல பாராளுமன்ற உறுப்பினர்களை வெளிநாடுகளே பாதுகாப்பாக வந்து தங்குமாறும் அழைத்திருந்தன. ஆனாலும்,  சந்திரநேரு சந்திரகாந்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சதாசிவம் கனகரத்தினம் போன்றவர்கள், இலங்கையை விட்டு வெளியேறவில்லை.

அவர்கள் இரத்தக்களரி இல்லாமல் மக்களை மீட்கவும், புலிகளைச் சரணடைய வைக்கவும் முயன்று கொண்டிருந்தனர் என்பதும் அதற்கான பேச்சுக்கள் நடத்தப்பட்டன என்பதும் இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விடயம். தற்போதைய அரசாங்கத்தில் உள்ளவர்கள் மத்தியில் மாத்திரமன்றி அதிகாரிகளிடத்தில் கூட, தமிழ் மக்கள் தொடர்பாக ஒரு அதிகாரப் போக்கு காணப்படுகிறது.

அண்மையில் ஒரு பொலிஸ் அதிகாரி யாழ்ப்பாண நீதிமன்றத்திலேயே, பிட்டும், சோறும் வடையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த தமிழ் மக்களை தாங்களே, பீஸா சாப்பிட வைத்திருக்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தார். தமிழ் மக்கள் பிட்டையும், சோற்றையும், வடையையும் சலிப்போடு சாப்பிடவில்லை என்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.

அவர்கள் அதனை விருப்போடு தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு பீஸா தெரியாத உணவாக இருந்திருக்கலாம். ஆனால், பீஸா கிடைக்கவில்லை என்று அவர்கள் ஏங்கியவர்களில்லை. அவ்வாறு ஏங்குவதற்கு, தமிழர்கள் ஒன்றும் இத்தாலிய வம்சத்தில் பிறந்திருக்கவில்லையே. அரசாங்கத்தினால் வெற்றி கொள்ளப்பட்ட போர், தமிழ் மக்களுக்குத் தேவையானதை வழங்கவில்லை.

அது பிட்டு, சோறுக்குப் பதிலாக பீஸாவைக் கொடுத்த விடயத்துக்கு மாத்திரம் பொருத்தமானது மட்டுமல்ல. தமிழ் மக்களின் உரிமைகள், அபிலாஷைகள் சார்ந்த விடயங்களுக்கும் பொருந்தக்கூடியதுதான். தமிழ் மக்களை விடுவித்தோம் என்று கூறுகின்ற அரசாங்கம் அவர்களின் நீண்டகால ஏக்கத்தைப் போக்கியதா? தமிழ் மக்களுக்கு அவர்களின் உரிமைகள் வழங்கப்படவில்லை. அவர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக் கூடிய அரசியல் தீர்வையும் வழங்கவில்லை. அவர்களின் பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கவில்லை.

இவ்வாறு தமிழ் மக்களின் எந்த எதிர்பார்ப்பையும் நிறைவேற்றாத அரசாங்கம், தமிழ் மக்களின் உரிமைகளைப் பற்றிப் பேசுகின்ற உரிமை, தமிழ் தலைவர்களுக்கு கிடையாது என்கிறது. தமிழ் மக்களை பாதுகாத்ததாக கூறுகின்ற அரசாங்கத்தின் பிரதிநிதிகள், அவர்களின் உரிமைகள், அதிகாரங்கள், அபிலாஷைகளை நிறைவேற்றிவிட்டு வேண்டுமானால் இவ்வாறான அதிகாரத்தை வெளிப்படுத்தலாம்.

மாறாக தமிழ் மக்களை நடு வீதியில் கொண்டு வந்து நிறுத்தி விட்டு, நீதிக்காகவும், நியாயத்துக்காகவும் நினைவேந்தலுக்காகவும் அலைகின்ற நிலையை ஏற்படுத்தி விட்டு, தமிழ் தலைவர்களை பார்த்து உங்களுக்குப் பேசுவதற்கு உரிமையில்லை என்றுகை நீட்டுவது பாரதூரமான விடயம். தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை பேசுவதற்கு உரிமையில்லை என்று அவர்கள் கூறுவதானது, எந்த மக்களால் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்களோ, அந்த மக்களின் இறைமையையும் ஆணையையும் மீறுகின்ற செயலும்கூட.