இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித்தின் அதிரடியான சதத்துடன் அவுஸ்திலேிய அணி 389 ஓட்டங்களை குவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. 

சிட்னியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் அவுஸ்திரேலியா 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த நிலையில் 2 ஆவது ஒரு நாள் போட்டி அதே சிட்னி மைதனாத்தில் பகல்-இரவு ஆட்டமாக இன்று ஆரம்பமாகியுள்ளது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஆரோன் பிஞ்ச் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

அதன்படி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப வீரர்களான ஆரோன் பின்ஞ்ச் மற்றும் டேவிட் வோர்னர் அற்புதமான இணைப்பாட்டத்தை அணிக்காக பெற்றுக் கொடுத்துள்ளனர்.

22.5 ஓவர்களை எதிர்கொண்ட இவர்கள் மொத்தமாக 142 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தனர். அதன் பின்னர் பின்ஞ்ச் 60 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேற, டேவிட் வோர்னரும் 83 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து நடையை கட்டினார்.

எனினும் மூன்றாவது வீராக களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் அதிரடியான ஆட்டத்தினால் 64 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகள் அடங்கலாக சதம் பெற்று 104 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அவரின் வெளியேற்றத்தையடுத்து அவுஸ்திரேலிய அணி தொடர்ந்தும் அதிரடி காட்டி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 389 ஓட்டங்களை குவித்தது.

ஆடுகளத்தில் மெக்ஸ்வெல் 63 ஓட்டங்களுடனும், ஹென்ரிக்ஸ் இரு ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் மொஹமட் ஷமி, பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.