சஹாப்தீன் -

“அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ஒரு திசையிலும், பாராளுன்ற உறுப்பினர்கள் வேறொரு திசையிலும் சென்று கொண்டிருக்கின்றார்கள். இதற்கு தனிப்பட்ட அரசியல் சுயநலனே அடிப்படையில் காரணமாகின்றது. ஆதலால் ரிஷாத் பதியுதீன் தம்மை சூழ இருப்பவர்கள் குறித்து மீள்பரிசீலனை செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகின்றது”

முஸ்லிம் தலைவர்கள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் உள்ளன. அவர்கள் சமூக விவகாரங்களை கையாள்வதில் புத்திசாதுரியமாக செயற்படுவதில்லை. சமூகத்தின் உரிமைகள் குறித்து நேர்மையாக பேசுவதில்லை. ஆட்சியாளர்களுடன் உறவுகளை வைத்துக் கொள்வதில் காட்டும் அக்கறையும், விட்டுக் கொடுப்பும் முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்திற்கு காட்டுவதில்லை என பல குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படுகின்றன.

இதேவேளை, முஸ்லிம்களின் அரசியல் தலைவர்களை பொறுத்தவரை ரிஷாத் பதியுதீன் மீதே அதிக குற்றச்சாட்டுக்களை பௌத்த கடும்போக்கு அமைப்புக்களும், தேரர்களும் முன் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ரிஷாத் பதியுதீன் மீதான குற்றச்சாட்டுக்கள் மஹிந்தராஜபக்ஷவின் அரசாங்கத்தின் காலத்திலிருந்தே முன் வைக்கப்படுகின்றன.

ரிஷாத் பதியுதீன் தம்மேல் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் பலவற்றை போலியான குற்றச்சாட்டுக்கள் என்று நிரூபித்துள்ள போதிலும், பௌத்த இனவாத கடும்போக்கு அமைப்புக்களும், தேரர்களும் விடுவதாகயில்லை. இவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட ரிஷாத்பதியுதீன் மீதான குற்றச்சாட்டுப் போட்டியில் அரசியல்வாதிகளும் இணைந்துள்ளார்கள்.

பேரினவாத அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் தேவைக்காக பௌத்த கடும்போக்குவாத அமைப்புக்களுடனும்,தேரர்களுடனும் இணைந்து அரசியல் சதுரங்க ஆட்டத்தை மேற்கொண்டுள்ளார்கள். இதேவேளை, முஸ்லிம் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லிம் மக்களின் உணர்வுகளின் மீது அரசியல் சதுரங்க ஆட்டத்தை ஆடிக் கொண்டிருக்கின்றார்கள் என்ற உண்மையும் உள்ளது.

ரிஷாத் பதியுதீன் வடமாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்து வாழும் வாக்காளர்களை வாக்களிப்பதற்கு சிலாபத்துறை பிரதேசத்திற்கு பஸ்களில் அழைத்துச் செல்வதற்காக 95 இலட்சம் ரூபா நிதியினை தவறாகக் கையாண்டார் என்ற குற்றச்சாட்டில் ஒக்டோபர் 19ஆம் திகதி கைது செய்யப்பட்டார். 37 நாட்கள் விளக்கமறியிலில் மகசீன் சிறையில் வைக்கப்பட்ட இவரை இம்மாதம் 25ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்துள்ளது.

இதேவேளை வில்பத்து - கல்லாறு காட்டினை சட்ட விரோதமாக அழித்ததாகவும், அழிக்கப்பட்ட காட்டினை தமது சொந்த நிதியில் மரங்களை நட வேண்டுமென்று மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வில்பத்து - கல்லாறு பகுதியில் காட்டினை அழித்து மக்களை குடியமர்த்தும் நோக்கில் நடவடிக்கை எடுத்தமைக்கு எதிராக சுற்றாடல் நீதிக்கான மையம் தாக்கல் செய்த வழக்கின் இத்தீர்ப்பிலேயே சட்டவிரோதமாக காடழிப்பு செய்யப்பட்டள்ளதாக தொவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மீள மரங்களை நடுவதற்காக ஒரு ஏக்கருக்கு 2 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான தொகை செலவாகும் என்றும், ரிஷாத் பதியுதீன் 50 கோடி ரூபாவை செலுத்த வேண்டுமென்று வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டப்ளியூ.ஏ.சி.வேறகொட தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் அரசியல்வாதிகளில் ரிஷாத் பதியுதீன் வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், வாழ்வாதார முன்னேற்றம் போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்தி ஒருவராக இருக்கின்றார். வடக்கு முஸ்லிம்கள் தாம்வாழ்ந்த பூர்வீகக் காணிகளை விட்டு 1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்தார்கள். அவ்வாறு இடம்பெயர்ந்த வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தினை பேரினவாதிகள் விரும்பவில்லை.

சுமார் 25 வருடங்கள் கைவிடப்பட்டிருந்த வாழ்விடங்கள் காடுகளாகவே காட்சியளித்துள்ளன. அக்காடுகளை துப்புரவு செய்து முஸ்லிம்கள் தங்களின் பாரம்பரிய பூர்வீகக் காணியில் மீளக் குடியேற்றியதைக் கூட பௌத்த கடும்போக்குவாத அமைப்புக்களும், தேரர்களும், பேரினவாத அரசியல்வாதிகளும் காடுகளை அழித்ததாகவும், அதற்கு ரிஷாத்பதியுதீன் துணையாகச் செயற்பட்டதாகவும், வெளிநாட்டு முஸ்லிம்களையும் குடியேற்றியதாகவும் குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார்கள்.

2012ஆம் ஆண்டு சுற்றாடல்வனத்துறை அமைச்சு மாவட்ட செயலாளருக்கோ, பிரதேச செயலாளருக்கோ எந்தவொரு அறிவித்தலையும் கொடுக்காது மறிச்சுக்கட்டி, கரடிக்குளி. போன்ற கிராமங்களில் வாழ்ந்த முஸ்லிம்களின் பூர்வீகக் காணிகளும் உட்பட 6,042 ஹெக்டயர் பூர்வீகக் காணியை (காடாக காட்சியளித்த) வனவளப் பிரதேசமாக பிரகடனம் செய்தது. இதேவேளை,வடமாகாணத்தில் இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியேற்றம் செய்வதற்கு அரசாங்கத்தின் அனுமதியுடன் காடுகள் அழிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் என்பது ரிஷாத் பதியுதீனின் தனிப்பட்ட விவகாரமல்ல. முஸ்லிம் சமூகத்தின் விவகாரமாகும். எல்லா முஸ்லிம் தலைவர்களுக்கும் கடமையான ஒன்றாகும். சிறுபான்மையினர் பெரும்பான்மையாக வாழ்கின்ற வடக்கு, கிழக்கு மாவட்டங்களில் வெளிமாவட்டங்களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிங்கள மக்களை புதிதாக குடியேற்றிக் கொண்டிருக்கின்றனர்.

இதற்காக அரசகாணிகளும், சிறுபான்மையினரிடம் பலாத்காரமாக பிடுங்கப்பட்ட காணிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், முஸ்லிம்கள் தங்களின் பூர்வீகக் காணிகளில் மீளக்குடியேறுவதனை தேசத்துரோக செயல்கள் போன்ற பௌத்த கடும்போக்குவாதிகள் பார்க்கின்றார்கள்.

யுத்த காலத்திலும், அதற்கு பின்னரும் முஸ்லிம்களிடமிருந்து பறிக்கப்பட்ட காணிகளில் ஒரு துண்டு கூட விடுவிக்கப்படவில்லை. நல்லாட்சியில் கூட அரசாங்கத்தில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் முஸ்லிம்களின் காணி உரிமையை பாதுகாக்கவில்லை.

முஸ்லிம் அரசியல் தலைவர்களுள் ரிஷாத்பதியுதீன் மீது எதற்காக அதிக நெருக்கடிகளை ஏற்படுத்துகின்றார்கள் என்று பார்க்கின்ற போது இனவாத அரசியலின் ஒரு நகர்வாகவே இருக்கின்றது. இலங்கையின் அரசியலில் பல அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள் மிகப் பெரிய ஊழல்களையும் புரிந்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இதனை தெளிவாக அவதானித்தோம். அவர்களில் எத்தனை பேருக்கு தண்டனை வழங்கப்பட்டது? அவர்களில் பலர் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் எதிர் அணியினரை குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்தமை கூட அரசியல் பழிவாங்கலாகவே அமைந்திருந்தது. அத்தகையதொரு அரசியல் தேவைக்காகவே ரிஷாத்ட் பதியுதீனும் கைது செய்யப்பட்டார் என்பதே ரிஷாத்தரப்பினரின் உறுதியான வாதமாகும்.

ரிஷாத் பதியுதீனை கைது செய்ய வேண்டுமென்ற அழுத்தங்களை மஹிந்தராஜபக்ஷவின் ஆட்சி முதல் தற்போதைய ஆட்சி வரைக்கும் பௌத்த கடும்போக்குவாத அமைப்புக்களும், தேரர்களும் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், இவர்கள் இந்த நாட்டில் மத்திய வங்கி பிணை முறி விவகாரத்தில் ஊழல் புரிந்தவர்கள் என்று குற்றச்சாட்டுக்களை முன் வைக்கின்றவர்களையும், இன்னும் ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ளவர்களையும் கைது செய்ய வேண்டுமென்று அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்கவில்லை.

சிறுபான்மையின மக்களின் அரசியலையும், தலைவர்களையும் சிறுமைப்படுத்தி சிதைப்பதற்காகவே பௌத்த கடும்போக்குவாதிகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதற்காக ஆட்சியாளர்களை தம்வசப்படுத்தி வைத்துள்ளார்கள். இலங்கையின் அரசியலை சிறுபான்மையினர் தீர்மானிப்பதனை இல்லாமல் செய்ய வேண்டுமென்பதற்காகவே பௌத்த மேலாதிக்கச் சிந்தனையை சிங்கள மக்களிடையே வளர்த்துள்ளார்கள். இன்று பௌத்த கடும்போக்குவாத அமைப்புக்களும், தேரர்களும்தான் ஆட்சியாளர்களை தீர்மானிக்கும் சக்தியாக திகழ்கின்றார்கள்.

தற்போதைய ஆட்சியாளர்களையும் பௌத்த மேலாதிக்கவாதிகள் விமர்சனம் செய்வதனையும் காணக்கூடியதாக உள்ளது. நாங்கள் உருவாக்கிய அரசாங்கம் எங்களை மீறிச் செயற்பட முடியாதென்று தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமென்ற சிந்தனையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

அவரின் இந்த எண்ணத்திற்கு பௌத்த கடும்போக்குவாத அமைப்புக்களும், தேரர்களும் தடையாக இருந்து விடுவார்களோ என்று எண்ணவும் வேண்டியுள்ளது. ஆட்சியாளர்கள் தங்களின் பேச்சிலும், நடவடிக்கைகளிலும், கொள்கைகளிலும் பௌத்த கடும்போக்குவாத அமைப்புக்களையும், தேரர்களையும் திருப்திபடுத்த வேண்டிய நிலையில் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.

ரிஷாத் பதியுதீனின் கைது விடயத்தில் அரசியல் காரணங்கள் உள்ளதாக எதிர்க்கட்சியினர் தெரிவித்துக் கொண்டாலும், இன்னுமொரு பக்கத்தில் பௌத்த கடும்போக்குவாத அமைப்புக்களையும், தேரர்களையும் திருப்திபடுத்தும் நிலையும்  காணப்படுகின்றது என்பது வெளிப்படையானது.

தொடர்ச்சியாக பல குற்றச்சாட்டுக்களுக்கும், நெருக்கடிகளுக்கும் ஆளாகிக் கொண்டிருக்கும் ரிஷாத் பதியுதீன் மன அழுத்தப்பாதிப்புக்குள் உள்ளாகியுள்ளதாக அவரது தரப்பினர் கூறுகின்றனர். இத்தகைய நிலையில் இருக்கின்ற ரிஷாத் பதியுதீனுக்கு அவரது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், உயர்பீட உறுப்பினர்கள் ஆறுதல்களையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும் வகையில் செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாடுகளும் இல்லாமில்லை. ஆனால் அத்தகையதொரு நிலை அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இருப்பதாகத் தெரியவில்லை.

ரிஷாத்பதியுதீன் கைது செய்யப்பட்ட போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களும், முக்கியஸ்தர்களும் அவரின் விடுதலைக்காக எத்துணை பங்காற்றினார்கள் என்பதில் ஆதரவாளர்களிடையே விசனங்கள் உள்ளன. தமது கட்சியின் தலைவரின் விடுதலைக்காக குரல்கொடுத்தால், முயற்சிகளை எடுத்தால் தங்களுக்கு ஆபத்துக்களை ஏன்படுத்திவிடுமோ என்ற அச்சம் அவர்களை தொற்றியிருந்தன.

அதேவேளை, ஏனைய முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் பிரச்சினையல்ல. அவரது ஊழல் விவகாரத்தில் மூக்கை நுளைத்து நாம் மாட்டிக் கொள்ள முடியாது என்ற தோரணையிலும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் வரைக்கும் அவர் சந்தேக நபராகவே கருதப்படுவார் என்ற நிலைப்பாடுகளையுமே கொண்டிருந்தனர்.

ரிஷாத் பதியுதீன் பிணையில் விடுதலை செய்யப்பட்டதன் பின்னர் அவரது விடுதலைக்கு தானே காரணமென்று கூறும் அந்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேர்மைக்கும், மக்களின் பிராத்தனைக்கும் கிடைத்த வெற்றி என்றும் அறிக்கைகளை விடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் அறிக்கைகளின் மூலமாக தலைமைத்துவ விசுவாசத்தைக் காட்ட முற்படுகின்றார்கள்.

தலைவரைச் சூழ இருப்பவர்கள் நல்ல ஆலோசகர்களாகவும், குற்றங்களை களைந்து தலைமையைப் பாதுகாப்பவராகவும், மக்கள் மத்தியில் தலைவரின் செல்வாக்கை வளர்ப்பவராகவும் இருக்க வேண்டும் என்பதே நியாயமான அரசியல் கலாசாரம். ஆனால், முஸ்லிம் அரசியல் தலைவர்களை சூழ இருப்பவர்களில் அதிகமானவர்கள் சந்தர்ப்பவாதிகளாகவும், சமூகத்தின் மீது பற்றில்லாதவர்களாகவும் இருப்பது தான் துரதிஷ்டவசமானது.

ஆதலால் ரிஷாத் பதியுதீன் தம்மை சூழ இருப்பவர்கள் குறித்து மீள்பரிசீலனை செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகின்றது. ஏனென்றால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ஒரு திசையிலும், பாராளுன்ற உறுப்பினர்கள் வேறொரு திசையிலும் சென்று கொண்டிருக்கின்றார்கள். இதற்கு தனிப்பட்ட அரசியல் சுயநலனே அடிப்படையில் காரணமாகின்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்டமைப்பை கட்சியினதும், தலைவரினதும், விசுவாசிகளைக் கொண்டு நிரப்ப வேண்டுமென்று ஆதரவாளர்கள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். அதேவேளை, தலைமைத்துவ விசுவாசிகளைக் கொண்டு கட்சியின் உட்கட்டமைப்பு அமைக்கப்படும் போது, அது சில வேளைகளில் தலைமையின் சர்வதிகாரத்திற்கும் காரணமாக அமைவதுண்டு என்ற விடயத்தினையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. தலைமைத்துவ விசுவாசிகள் அதிகரிக்கும் போது சமூகத்தின் மீது பற்றுக் கொண்டவர்கள் ஒதுக்கப்படும் நிலையும் உருவாகும் என்பதனை கருத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறிருக்க,பௌத்த இனவாதம் மேலோங்கியுள்ள அரசியல் சூழலில் முஸ்லிம் கட்சிகள் தமது அரசியல் நடவடிக்கைகளை சரியாக கையாளாமை கூட முஸ்லிம்களின் மீதான நெருக்கடிகளுக்கு காரணமென்று சொல்லப்படுகின்றது. முஸ்லிம்கள் மீது நெருக்கடிகளை ஏற்படுத்துவதற்கு அரசியல் பின்னணியும் உள்ளது.

முஸ்லிம்களிடையே அதிக செல்வாக்குப் பெற்ற முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் ஆகியன தொடர்ந்தும் ஆளுங் கட்சியாகவும், ஒரே பேரினவாதக் கட்சியுடன் கூட்டு வைத்துக் கொண்டிருப்பதும் ஒரு காரணமாகும். முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் காலங்களில் மஹிந்தராஜபக்ஷவுக்கு எதிராகவும், தேர்தலின் பின்னர் ஆட்சி அமைக்கும் கட்சியுடன் உறவுகளை பேணிக் கொள்ளும் கொள்கையையும் தொடர்ச்சியாக பின்பற்றிக் கொண்டிருக்கின்றன.

அத்தோடு முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை மஹிந்தவுடன் உறவுகளை வைத்துக் கொண்டன. 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை ரணிலுடன் உறவு வைத்துக் கொண்டன. தற்போது சஜித்துன் உறவை வைத்துள்ளார்கள். மேற்படி கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய ஆட்சியாளர்களுடன் உறவை வைத்துள்ளார்கள்.

முன்னாள் கல்வி அமைச்சர் பதியுதீன் மஹ்மூத் முஸ்லிம்களின் முட்டைகள் (வாக்குகள்) ஒரு கூடையில் இருக்கக் கூடாது. ஆட்சி அமைக்கக் கூடிய இரு கட்சிளினதும் கூடைகளில் இருக்க வேண்டும். அப்போதுதான் முஸ்லிம்களின் நலன்களையும், பாதுகாப்பையும் தொடர்ச்சியாக உறுதி செய்து கொள்ளலாமென்று சிந்தனையை கொண்டவராக செயற்பட்டுள்ளார்.

ஆதலால், முஸ்லிம் கட்சிகள் தேர்தல் காலங்களில் ஒரு திசையில் நின்று அரசியல் செய்தது கூட முஸ்லிம்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சி அரசியலுக்கு பழக்கப்படாத கட்சிகளாகவே முஸ்லிம் கட்சிகளும், முஸ்லிம் வாக்காளர்களும் உள்ளார்கள். அதற்காக சமூகத்தை தரைவார்த்துச் செயற்படவும் முடியாது.

தற்போது ஏற்பட்டுள்ள சிக்கலான நிலைமையிலிருந்து மீள்வதற்கு முஸ்லிம் அரசியல் வாதிகள் மத்தியில் தந்திரோபய அரசியல் நகர்வே அவசியமாகின்றது. அது எவ்வாறு இருக்கப்போகின்றது என்பதற்கு அப்பால் தாம்மை சாராது தம் சமூகம் சார்ந்ததாக இருந்தால் தேவலை.