நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் கிரக்கெட் அணியில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

இதனால் நியூஸிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் குழாமில் மொத்தமாக 7 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக நியூஸிலாந்து சுகாதார அமைச்சும் கிரிக்கெட் நிர்வாகமமும் தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் இவர்களுடன் தொடர்புகளை பேணிய நபர்களை அடையாளம் காணும் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நவம்பர் 24 ஆம் திகதி நியூஸிலாந்துக்கு பாகிஸ்தான் அணியினர் வருகை தந்தவுடன் நடத்தப்பட்ட முதல் சோதனைகளில் சர்பராஸ் அஹமட், ரோஹைல் நசீர், நசீம் ஷா, மொஹமட் அப்பாஸ், ஆபிட் அலி மற்றும் டேனிஷ் அஜீஸ் ஆகிய ஆறு வீரர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானமை தெரியவந்தது.

இந் நிலையில் கிறிஸ்ட்சர்ச்சில் தனிமைப்படுத்தலில் உள்ள பாகிஸ்தான் அணியினரிடத்தில் மூன்றாம் நாளில் நடத்தப்பட்ட இரண்டாவது சோதனை முடிவுகளில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

எனினும் அவரது பெயர் விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

பாகிஸ்தான் அணி முறையே டிசம்பர் 18, 20 மற்றும் 22 ஆகிய திகதிகளில் ஆக்லாந்து, ஹாமில்டன் மற்றும் நேப்பியர் ஆகிய இடங்களில் மூன்று இருபதுக்கு : 20 போட்டிகளிலும், மவுங்கானுய் மவுண்ட் (டிசம்பர் 26-30) மற்றும் கிறிஸ்ட்சர்ச் (ஜனவரி 3-7) ஆகிய இடங்களில் இரு டெஸ்ட் போட்டிகளிலும் நியூஸிலாந்துடன் முட்டி மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.