• இன்று நாட்டில்  487 பேருக்கு கொரோனா
  •  உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 109 ஆக உயர்வு!
  • நாட்டின் 87 சிறைச்சாலைகளில் கொரோனா தொற்று
  • தனியார் சிகிச்சை நிலையம் ஒன்றில் வைத்தியருக்கு கொரோனா
  • கண்டி - தேசிய வைத்தியசாலையில் அதிகரிக்கும் கொரோனா  

 

நாட்டில் இன்று (28-11-2020) இரவு 11 மணி வரை  487 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்கள் அனைவரும் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து மினுவங்கொடை பேலியகொடை கொத்தணியின் எண்ணிக்கை 19450 ஆக உயர்வடைந்துள்ளது. 

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 22,988 ஆக உயர்வடைந்துள்ளதுடன்  6,225 தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 430  பேர் குணமடைந்ததையடுத்து மொத்த எண்ணிக்கை 16,656 ஆக அதிகரித்துள்ளது. 

இதேவேளை, கொரோனா தொற்று சந்தேகத்தில் 531 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் நாட்டில் இதுவரை 802832 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 109 ஆக உயர்வு!

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

கொழும்பு 02 ஐ சேர்ந்த ஆண் ஒருவர் நவம்பர் 26 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்று மற்றும்  அதீத குறுதிபோக்கு காரணமாக இவர் உயிரிழந்துள்ளதாக அரசங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

கொழும்பு 08 ஐ சேர்ந்த 96 வயது பெண் ஒருவர், நவம்பர் மாதம் 27 ஆம் திகதி தனது வீட்டில் உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்று மற்றும்  நாட்பட்ட சுகயீனம் காரணமாக இவர் உயிரிழந்துள்ளதாக அரசங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 109 ஆக உயர்வடைந்துள்ளது. 

நாட்டின் 87 சிறைச்சாலைகளில் கொரோனா தொற்று!

நாட்டில் அமைந்துள்ள 87 சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு கொரோனா தொற்று வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள கைதிகள் 63 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் இதுவரையில் மொத்தமாக 908 கைதிகள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நாட்டில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை வேகமாக அதிகரித்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பசறையில் 11 வயது சிறுமி உட்பட நால்வருக்கு கொரோனா..!

பசறை- நமுனுகுல வீதியில் அமைந்துள்ள கனவரல்ல தோட்டத்தின் 13 ஆம் கட்டைப் பகுதியில் 11 வயது சிறுமி, இரண்டு பெண்கள், ஒரு ஆண் உட்பட நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இப்பகுதியில் ஏற்கனவே 7 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், தற்போது இப்பகுதியில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளமையும் குறிப்பிடதக்கது. 

கேப்பாபுலவு விமானப்படை தனிமைப்படுத்தல் பலருக்கு கொரோனா!

முல்லைத்தீவு கேப்பாபுலவு விமானப்படைத் தளத்தில் விமானப்படையுடன் தொடர்புடைய  கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புடையவர்கள்  என்ற  அடிப்படையில் 145 பேர் கடந்த 21ம் 22ம் திகதிகளில் தனிமைப் படுத்தப்பட்டிருந்தனர்.

அந்த வகையில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் அடிப்படையில்  குறித்த பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் எட்டு பேருக்கு கொரோனா தொற்று  இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேப்பாப்புலவு விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்த கொண்டுவரப்பட்ட 145 பெயரில் இதுவரை 14 பேர் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொட்டகலையில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி..!

கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் மேலும் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று காலை (28.11.2020) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு தொற்றுக்குள்ளானோர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இருந்து வந்தவர்களென்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கொழும்பில் இருந்து எவராவது வந்திருந்தால், அவர்களின் தகவல்களை மறைக்காமல் அதனை உரிய தரப்பினருக்கு வழங்குமாறு கொட்டகலை பிரதேச சபையின் தவிசாளர் ராஜமணி பிராசாந்த், கொட்டகலை பிரதேச  சுகாதார பரிசோதகர் சௌந்தராகவன் ஆகியோர்  கேட்டுகொண்டுள்ளனர்.

தனியார் சிகிச்சை நிலையம் ஒன்றில் வைத்தியருக்கு கொரோனா

ருவன்வெல்ல - அங்குருவெல்ல நகரில் தனியார் சிகிச்சை நிலையம் ஒன்றை நடாத்திச் சென்ற வைத்தியருக்கும் அவரின் மனைவிக்கும் கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது

இதனையடுத்து அவரிடம் சிகிச்சைகளுக்காக  வந்துள்ள  500க்கும் மேற்பட்டடோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சுகாதார பரிந்துரைகளை பின்றபற்றாது குறித்த வைததியர் நோயளிகளுக்கு சிகிச்சையளித்துள்ளதாக பொது மக்கள் சிலர் முறையிட்டுள்ளதாக ருவன்வெல்ல சுகாதார மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

கண்டி - தேசிய வைத்தியசாலையுடன் தொடர்புடைய மேலும் 17 பேருக்கு கொரோனா  

கண்டி - தேசிய வைத்தியசாலையின் கண் மற்றும் காது தொடர்பான சிகிச்சை பிரிவில் சேவையாற்றும் இரண்டு தாதியர்களுடன் தொடர்பை பேணிய வைத்தியர் ஒருவர்,  9 தாதியர்கள் உள்ளிட்ட 17 பேருக்கு கொரோனா  தொற்றுறுதியாகியுள்ளது. 

கண்டி தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் விஷேட மருத்துவர் இரேஷா பெர்ணான்டோ இதனை தெரிவித்துள்ளார்.

---