(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர எமக்கு முழுமையான உரிமை உள்ளது. நானும் அதே எண்ணத்திலேயே பண்டிதரின் இல்லத்திற்கு சென்று நினைவுகூர்ந்தேன், ஜே.வி.பியினர் தமது வீர்ர்களை நினைவுகூரும் வேளையில் வேடிக்கை பார்ப்பவர்கள் எமது தமிழர்கள் விடயத்தில் பொங்கி எழுவீர்களா என சபையில் அமைச்சர் சரத் வீரசேகரவை பார்த்து சுமந்திரன் எம்.பி கேள்வி எழுப்பினார். 

ஜே.வி.பியை விடுதலைப்புலிகளுடன் ஒப்பிட வேண்டாம். இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளதென அமைச்சர் சரத் வீரசேகரவும் வாதிட்டார். இதனால் சபையில் இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பாராளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை, சிறப்புரிமை எழுப்பிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன், அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வாக்குமூலம் வழங்க எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது, அவர்களின் அறிவிப்பு எனக்கு தாமதமாகியே கிடைத்தது, அதேபோல் குறித்த தினத்தில் நான் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள வேண்டியுள்ளதால் என்னால் வர முடியாது என நான் நகல் மூலமாக அறிவித்திருந்தேன். 

ஆனால் நான் வேண்டுமென்றே விசாரணை ஆணைக்குழுவை நிராகரித்ததாக அடுத்த நாள் வெளிவந்த பத்திரிகைகளில் பார்த்தேன். இது எனது சிறப்புரிமையை  மீறும் விடயமாகும் என அவர் தனது நிலைப்பாட்டை சபையில் கூறினார்.

இந்நிலையில் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய அமைச்சர் சரத் வீரசேகர :- விடுதலைப்புலிகளின் தலைவர்களில் ஒருவரான பண்டிதருக்கு சுமந்திரன் நினைவஞ்சலி செலுத்தினார், அவர் பிரபாகரனின் நண்பர். அவர் 1979 இல் விடுதலைப்புலிகள் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்தார். 

கிட்டு மற்றும் பண்டிதர் ஆகியோர் இராணுவத்தின் பலரை கொலை செய்தவர்கள். அவ்வாறான நபர் ஒருவருக்கு இவர் நினைவஞ்சலி செலுத்தியுள்ளார். நாட்டினை பிளவுபடுத்த மாட்டேன் என்ற சத்தியப்பிரமாணதை பாராளுமன்றத்தில் செய்துவிட்டு இவ்வாறான செயற்பாடுகளில் எவ்வாறு இவர்களால் கலந்துகொள்ள முடியும்? எனவே சபாநாயகர் இது குறித்து சுமந்திரனிடம் விளக்கம் கேட்க வேண்டும். 

வடக்கில் சென்று விடுதலைப்புலிகளின் தலைவர்களுக்கு நினைவேந்தல் நடத்திவிட்டு சபையில் வந்து சிறப்புரிமை பற்றி பேசுகின்றனர் என்றார்.

இதற்கு பதில் தெரிவித்த சுமந்திரன் எம்.பி:- நான் அமைச்சருக்கு பதில் கூறவேண்டிய கடப்பாட்டில் இல்லை, எனினும் என்னிடம் இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளதால், சின்னதுரை மகேஸ்வரி என்ற பெண்மணிக்காக நான் யாழ் நீதிமன்றத்தில் ஆஜரானேன். அவருக்கு 83 வயதாகின்றது. அவருடைய மகனே பண்டிதர் என அழைக்கப்படுவார். அவர் 1985 இல் கொல்லப்பட்டுள்ளார். 

அவ்வாறு இறந்த தனது மகனின் நினைவு தினத்தில் குறித்த நாளில் அவர் நினைவஞ்சலி செலுத்துவார். கொல்லப்பட்டவர் விடுதலைப்புலிகளின் தலைவர்களில் ஒருவர் தான். ஆனால் குறித்த தாய்க்கு அவர் மகன், சகல தாயாருக்கும் அவர்களின் பிள்ளைகள் மீதான பற்று உள்ளது. அவர்களை நினைவுகூர எமது மக்களுக்கு உரிமை உள்ளது.  

அமைச்சர் அவர்களே, நீங்கள் ஏன் ஜே.வி.பியின் தலைவர் ரோஹன விஜயவீரவின் நினைவேந்தலையோ அன்றைய தினம் கொழும்பு வீதிகளில் ஊர்வலம் செல்வார்கள் குறித்தும்  இதேபோன்று கேள்வி கேட்கவில்லை. தமிழர்கள் மீது மட்டும்தான் உங்களில் கேள்விகள் எழுகின்றது.

 குறித்த அந்தத் தாயார் எனது சேவை பெறுனர் என்ற ரீதியிலும், அதேபோல் மிக முக்கியமாக நீதிமன்றமே இந் நிகழ்வுகளை வீடுகளில் இருந்து அனுஷ்டிக்க அனுமதி வழங்கியுள்ள நிலையில் அவரது இல்லத்திற்கு சென்று, அவரிடம் நீதிமன்ற தீர்ப்பை கூறியதுடன் அவரது மகனின் நினைவேந்தளில் நான் கலந்துகொண்டேன்.

 அவர் வசிப்பது வீடும் அல்ல, ஒரு சிறிய குடிசையிலேயே அவர் வசிக்கின்றார். இதையெல்லாம் இந்த சபைக்கு கூற வேண்டும் என்ற தேவை எனக்கு இல்லை, ஆனால் அனாவசியமான விடயங்களை அமைச்சர் அவர்கள் என்னிடம் கேட்கவும் நான் இதனை கூறுகின்றேன். 

அமைச்சர் அவர்கள் பாராளுமன்ற நிலையியல் கட்டளையை மீறி இந்த விடயங்களை என்னிடம் கேட்டுள்ளார். எனினும் இவ்வாறான கேள்விகளை கேட்டு நாட்டினை தவறாக வழிநடத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

மீண்டும் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய அமைச்சர் சரத் வீரசேகர :- சுமந்திரன் அவர்கள் நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கும், ஐக்கியத்திற்கும் எதிரான விடயங்களை உருவாக்குகின்றார். ஒரு தாய் அவரது மகனுக்கு நினைவஞ்சலி செலுத்துவது பிரச்சினை அல்ல, ஆனால் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் ஒருவரும், இராணுவத்தை கொன்ற ஒருவரது இல்லத்திற்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சென்று அஞ்சலி செலுத்துவதே பிரச்சினையாக உள்ளது. 

பிரிவினைவாதத்தை உருவாக்கிய தடைசெய்யப்பட்ட ஒரு இயக்கத்தின் உறுப்பினரை நினைவுகூறும் இவர்கள் எவ்வாறு பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ள முடியும். 

நீங்கள் ஜே.வி.பியை விடுதலைப்புலிகளுடன் ஒப்பிட முடியாது. ஜே.வி.பி வேறு விடுதலைப்புலிகள் வேறு. விடுதலைப்புலிகள் நாட்டினை பிளவுபடுத்தியவர்கள். அவ்வாறானவர்களை ஜே.வி.பியுடன் ஒப்பிட உங்களுக்கு உரிமை இல்லை.

 நீங்கள் இனவாதிகள்,பெரும்பான்மை மக்களின் இறையாண்மையை நீங்கள் கேள்விக்கு உற்படுத்துகின்றீர்கள். முழு நாட்டினதும் இறையாண்மையை கேள்விக்கு உற்படுத்த வேண்டாம் என்றார்.

இதனை அடுத்து சபையில் சுமந்திரன் எம்.பிக்கும் அமைச்சர் சரத் வீரசேகரவிற்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றது. உங்களின் செயற்பாடுகள் வெட்கமளிக்கின்றது என இருவரும் ஒருவருக்கு ஒருவர் கூறிக்கொண்டனர்.