(இராஜதுரை ஹஷான்)

போதைப்பொருள் வியாபாரம், பாதாள உலகக் குழுவினர் உள்ளிட்ட சட்டவிரோத  செயற்பாடுகளை இல்லாதொழித்தல், சிறைச்சாலை மறுசீரமைப்பு, பயங்கரவாதம், தீவிரவாதம், மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு  தொடர்பிலும், இரு நாடுகளுக்கு இடையில் ஒத்துழைப்பு மேம்படுத்தல்  குறித்து மாலைத்தீவின் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட தூதுகுழுவினருக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம் பெற்றது.

மாலைதீவின் பாதுகாப்பு அமைச்சர் மொஹமட் டிடி உள்ளிட்ட  தூதுக்குழுவினர் நேற்று வெள்ளிக்கிழமை விஜயராம மாவத்தையில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பிரதமரை சந்தித்தனர்.

இந்தியா, மாலைத்தீவு மற்றும் இலங்கைக்கு இடையே கடல்சார் பாதுகாப்பு, ஒத்துழைப்பு தொடர்பில் நான்காவது தேசிய பாதுகாப்பு ஆலோசனை முத்தரப்பு கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்கு  முன்னர் நாட்டுக்கு விஜயம் செய்த மாலைத்தீவு பாதுகாப்பு பிரதானிகள்  பிரதமரிடம் பிராந்திய பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடினர்.

போதைப்பொருள், பாதாள உலகக் குழுவினர் உள்ளிட்ட சட்டவிரோத வியாபாரத்தை இல்லாதொழித்தல் மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு பயங்கரவாத தீவிரவாதம் மற்றும்  பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பிலும் இரு நாடுகளுக்கு இடையில் நல்லுறவை மேம்படுத்தல் குறித்து அதிக அவதானம் செலுத்தப்பட்டது.

மாலைத்தீவின் பாதுகாப்பு அமைச்சர் மொஹமட் டிடி,பிரதி  பாதுகாப்பு படைத்தலைவர் பிரிகேடியர் ஜெனரல் அப்துல் ரஹூம் அப்துல் மதின், இலங்கைக்கான மாலைத்தீவு உயர்ஸ்தானிகர் ஒமார் அப்துல் ரசாக்,பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் இஸ்மாயில் நசீர் மற்றும் நிதி மூலதன சந்தை இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் பிரதமரின் செயலாளர் காமினி செனரத் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.