சுய தனிமைப்படுத்தலில் இருந்த மக்களை பொது இடத்துக்கு லரவழைத்து பி.சி.ஆர் பரிசோதனை இடம் பெற்றமை தொடர்பில் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிராந்திய சுகாதார சேவை பணிமனையினரால் குறித்த பரிசோதனை இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் போத்தல் நீர் வினியோகஸ்தர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சுய தனிமைப்படுத்தலில் இருந்தவர்களிற்கே இன்று சனிக்கிழமை மாதிரிகள் பெறப்பட்டன.

முறிகண்டி, செல்வபுரம் பகுதிகளில் வர்த்தக நிலையங்களை நடார்த்தி வந்த வர்த்தகர்களே இவ்வாறு சுய தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் மாதிரிகள் பெறப்பட்டன.

இவர்களை முடிகண்டியில் உள்ள வசநதநகர் பொது நோக்கு மண்டபத்துக்கு அழைத்து மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.

ஏனைய பகுதிகளில் தனிமைப்படுத்தப் பட்டவர்களின் வீடுகளிற்கு சுகாதார தரப்பினர் மாதிரிகளை பெற்று வந்த நிலையில் குறித்த சம்பவம் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த அழைக்கப்பட்ட வர்த்தகர்கள் 2 மணிநேரங்கள் குறிப்பிட்ட ஓர் இடத்தில் தரித்து நின்றுள்ள நிலையில் ஒவ்வொருவராக அழைத்து மாதிரிகள் பெறப்பட்டன.

குறித்த சம்பவம் தொடர்பில் வருகை  தந்திருந்த மருத்துவ குழுவில் பிரதேசத்துக்கு பொறுப்பாக இருந்த சுகாதார பரிசோதகரிடம் வினவியபோது,

இவர்களிடமிருந்து தனித்தனியாக மாதிரிகளை பெறுவதற்கு வாகனம் இல்லை என தெரிவித்தார். இவர்கள் இரண்டாம் நிலையில் உள்ள தொற்று சந்தேக நபர்கள் எனவும், கிளிநொச்சி நீர் வினியோகத்தில் தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என தன்மைப்படுத்தலில் இருந்தவர்கள் என தெரிவித்த அவர், இவர்கள் ஒட்டுசுட்டான் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு சென்று மாதிரிகளை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இவர்களின் இலகுபடுத்தலிற்காகவே அருகில் உள்ள பகுதி தெரிவு செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் குறித்த சம்பவம் தொடர்பில் பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.