யாழ்ப்பாணம் - சங்கானை நகரில் அமைந்துள்ள மீன் சந்தை மற்றும் மதுபானசாலை என்பன மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சங்கானை மீன் சந்தை வியாபாரிகள் 36 பேர் குடும்பத்துடனும், சைக்கிள் கடை ஒன்றினைச் சேர்ந்த 6 பேரின் குடும்பங்களும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையும் 3 நாள்கள் மூடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில் குறித்த நடவடிக்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து காரைநகருக்குத் திரும்பிய ஒருவருக்கு கொரோனா தொற்றுள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் சென்று வந்த இடங்களில் தொடர்புடையவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

கடந்த 21ஆம் திகதி கொழும்பு வெள்ளவத்தையிலிருந்து காரைநகருக்கு வருகை தந்த அவர், 3 நாள்களுக்கு மேல் பல இடங்களுக்கு நடமாடிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு நேற்று அவரது மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு  உள்படுத்தப்பட்ட  நிலையில் கொரோனா தொற்றுள்ளமை உறுதியாகியுள்ளது.

அத்தோடு, மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு அவர் சென்றதால், வைத்தியசாலையை 3 நாள்களுக்கு மூடுவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வைத்தியசாலையின் சேவையாளர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், குறித்த நபர் சங்கானை மீன் சந்தைக்குச் சென்றதால், குறித்த சந்தையை மறு அறிவித்தல் வரை மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், 36 வியாபாரிகள் குடும்பத்துடன் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்தோடு, அவர் சைக்கிள் கடைக்குச் சென்ற நிலையில் அங்கு இருந்த 6 பேர் குடும்பத்துடன் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், சங்கானை மதுபானசாலைக்கு அவர் சென்றுள்ள நிலையில் மதுபானசாலை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது. அங்கு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த 4 பேர் குடும்பத்துடன் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்படவுள்ளனர். அதில் தொற்றில்லை  என உறுதியானால் மீன் சந்தை, மதுபான சாலை என்பன திறக்க அனுமதிக்கப்படும் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.