தமிழர்களின் உணர்வு ரீதியான செயற்பாடுகளுக்க மதிப்பளிக்காது வடக்கு கிழக்கில் செயற்பட்டு வரும் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் அருத்தந்தையை கைது செய்தமை சர்வதேச நியமங்களுக்கு ஏற்புடையதல்ல. எனவே அவரது கைதை வன்மையாக கண்டிப்பதோடு உடன் விடுதலை செய்ய வேண்டும் எனவும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஆயர் இல்லத்திற்கு முன்பாக யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூறுவதற்கு தயாரான சிறிய குருமடத்தின் அதிபர் அருட்தந்தை பாஸ்கரனின் கைதை கண்டித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நவம்பர் 27 தமிழர் தாயகத்தில் யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் நாளாக காணப்படும் நிலையில் அதனை தடுத்து நிறுத்திவிட வேண்டும் என அரசு எத்தனித்து பொலிஸாரை கொண்டு கட்டுப்படுத்தியது.

நீதிமன்றங்களின் ஊடாக வழங்கப்பட்ட உத்தரவின் பிரகாரம் பொது இடங்களிலும் மக்களை ஒன்றிணைத்தும் நினைவு கூரமுடியாது என்பதேயாகும்.

இந்நிலையில் அருட்தந்தை தான் வசிக்கும் ஆயர் இல்லத்திற்கு முன்பாக தனித்து தனது உணர்வு ரீதியான வெளிப்படுத்துகைக்கு தயாரான போது பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து கைது செய்துள்ளனர்.

வேண்டுமென்றே மதகுரு ஒருவரை கைது செய்து ஒட்டுமொத்த மதகுருக்களையும் அச்சுறுத்தும் நிலைக்கு பொலிஸார் சென்றுள்ளனர்.

இது சர்வதேச நியமங்களுக்கு ஏற்புடையதல்ல. எனவே அருட்தந்தையை உடன் விடுதலை செய்ய வேண்டும் என தெரிவித்துக்கொள்கின்றேன் என அவ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.