(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)


தேயிலை தோட்டங்களுடன் தொடர்புபட்ட  நான்கு  மில்லியன்  மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் அனைவரும் நாட்டிற்கு சுமை இல்லாதவர்களாக, ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் என எவற்றிலும் ஈடுபடாது நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்து வருகின்றனர். எனவே தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த கொடுப்பனவை 1000 ரூபாவாக வழங்க அரசாங்கம் பின்வாங்காமலும், தோட்ட கம்பனிகளுக்கு அஞ்சாததுமான உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் கயந்த கருணாதிலக சபையில் தெரிவித்தார்.


அவர் மேலும் கூறுகையில்,

இந்த நாட்டின் சகல பிரஜைகளுக்கும் இந்த நாட்டில் தமக்கென்ற காணி இருக்க வேண்டும் என்பது அனைவரும் ஏற்றுகொள்ள வேண்டிய விடயமாகும். ஆனால் இன்றுவரை பலருக்கு அவ்வாறு நிலங்கள் இல்லை. கடந்த காலங்களில் எமது ஆட்சியில் காணி சட்டமொன்று கொண்டுவந்தோம்.

ஆனால் அதனை தடுக்க பலரால்  நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறிப்பாக யுத்தத்திற்கு பின்னர் வடக்கு கிழக்கில் பல கிராமங்களை புனரமைக்கவும் அவர் அவர்களுக்கான காணிகளை ஒதுக்கிக்கொடுக்கவும் வேண்டியிருந்தது.

 அவ்வாறு 40க்கும் அண்ணளவான கிராமங்கள் இருந்தது. அவை இன்றுவரை கருத்தில் கொள்ளப்படாதுள்ளது. அதேபோல் காணி மறுசீரமைப்பு திணைக்களம் இந்த விடயத்தில் முக்கிய பங்களிப்பை செலுத்துகின்றது.

குறிப்பாக மலையகத்தில் காணிகளை அளவீடும் விடயங்களில் அவர்களுக்கே அவர்களின் நிலம் எதுவென தெரியாத நிலைமை உருவாகியுள்ளது.

அரச நிலங்களை யார் உரிமை கூறுவது என்ற சிக்கல் இன்று எழும்பியுள்ளது. நீண்டகால வழக்குகள் செல்கின்றது. எமது ஆட்சியில் நான் காணி அமைச்சராக இருந்த காலத்தில் சில முயற்சிகளை எடுத்து தீர்வுகளை வழங்க செயற்பட்டேன். ஆனால் முழுமையாக அதனை என்னால் கையாள முடியாது போயுள்ளது.

அதேபோல் சிறு தேயிலை உற்பத்தியாளர்கள் இன்று நாட்டின் பிரதான தேயிலை உற்பத்தியாளர்களாக மாறியுள்ளனர். ஐந்து இலட்சம் பேரளவில் அவர்கள் உள்ளனர்.

தேயிலை தொழிற்சாலையுடன் நேரடியாக தொடர்புப்பட்ட 20 இலட்சம் பேர் உள்ளனர் என நினைக்கின்றேன். தேயிலை தோட்டங்களுடன் நான்கு மில்லியன் மக்கள் வாழ்வார்கள் எனவும் நம்புகிறேன். இவர்கள் அனைவரும் நாட்டிற்கு சுமை இல்லாதவர்கள். ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் என எதுவுமே இல்லாது நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்யும் நபர்கள். கடந்த காலங்களில் எமது தேயிலை உற்பத்தி குறைவடைந்துள்ளது. 

தேயிலை தொழிலாளர்களுக்கு நாளாந்த கொடுப்பனவை 1000 ரூபாவாக வழங்க அரசாங்கம் தீர்மானம் எடுத்தது. மார்ச்  மாதத்தில் இந்த வாக்குறுதி வழங்கப்பட்டது.

ஆனால் இந்த ஆண்டும் முடியப்போகின்றது. இந்த கொடுப்பனவை அடுத்த ஆண்டு ஜனவரியில் கொடுப்பதாக வரவு செலவு திட்ட உரையில் பிரதமர் கூறியுள்ளார். ஆனால் கம்பனிகள் இதனை ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை.

இறுதி நேரத்தில் கட்டுபாடுகள், நாளுக்கான தொழில் நேரத்தை அதிகரித்தால் தருவோம் என்ற கதைகளை கூறாது அவர்களுக்கு நாளாந்த கொடுப்பனவை ஆயிரம் ரூபாவாக வழங்க வேண்டும் என அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம். உர மானியத்திலும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் சபையில் தெரிவித்தார்.