முல்லைத்தீவு கேப்பாபுலவு விமானப்படைத் தளத்தில் விமானப்படையுடன் தொடர்புடைய  கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புடையவர்கள்  என்ற  அடிப்படையில் 145 பேர் தனிமைபடுத்துகின்ற நோக்கத்தோடு கடந்த 21ம் 22ம் திகதிகளில் கொண்டு வந்து தனிமைப் படுத்தப்பட்டிருந்தனர்.

இவர்களில் ஒரு தொகுதியினருக்கு  23.11.2020 அன்று மேற்கொள்ளப்பட்ட பி. சி .ஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் இருவருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்கள் கொரோனா சிகிச்சை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்னும் ஒரு தொகுதியினருக்கான பி.சி.ஆர்  பரிசோதனைகள் 24.11.2020 அன்று மேற்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த நபர்களில் நான்கு பேர் கோரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பது அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர்கள் மருதங்கேணி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் அடிப்படையில்  குறித்த பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் எட்டு பேருக்கு கொரோனா தொற்று  இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த 8 பேரும் மருதங்கேணி கொரோனா சிகிச்சை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

இந்நிலையில் கேப்பாப்புலவு விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்த கொண்டுவரப்பட்ட 145 பெயரில் இதுவரை 14 பேர் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.