லங்கா பிரிமியர் லீக் தொடரின் இரண்டாவது போட்டியில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி 8 விக்கெட்களினால் கோல் கிளாடியேட்டர்ஸ் அணியை தோற்கடித்து அபாரவெற்றி பெற்றது.

இலங்கை கிரிக்கெட் வரலாற்றின் புதிய அத்தியாயமான லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடரானது பல தடைகள், பல சவால்களுக்கு மத்தியில் நவம்பர் 26 ஆம் திகதி  கோலாகலமாக ஆரம்பமானது.

கொழும்பு கிங்ஸ், தம்புள்ள வைக்கிங், கோல் கிளாடியேட்டர்ஸ், ஜப்னா ஸ்டாலியன்ஸ் மற்றும் கண்டி டஸ்கர்ஸ் ஆகிய ஐந்து அணிகள் பங்கு பற்றும் இத் தொடரின் அனைத்து போட்டிகளும் ஹம்பாந்தோட்டை, சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகின்றன.

இந்நிலையில், தொடரின் 2 ஆவது போட்டி நேற்று இடம்பெற்றது. இதில் கோல் கிளாடியேட்டர்ஸ் மற்றும் ஜப்னா ஸ்டாலியன்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய கோல் கிளாடியேட்டர்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துப்பெடுத்தாடிய கோல் கிளாடியேட்டர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 175 ஓட்டங்களை பெற்றது.

176 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி 19.3 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 176 ஓட்டங்களை பெற்று அபார வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 2 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

இப் போட்டியின் ஆட்டநாயகனாக ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி சார்பாக ஆட்டமிழக்காது 92 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த அவிஸ்க பெர்னாண்டோ தெரிவு செய்யப்பட்டார்.

இன்று 2 போட்டிகள் இடம்பெறவுள்ளன. 

முதலாவது போட்டியில் தம்புள்ள வைக்கிங் மற்றும் கண்டி டஸ்கர்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தும் அதேவேளை, இரவு இடம்பெறும் 2 ஆவது போட்டியில், கொழும்பு கிங்ஸ் மற்றும் கோல் கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.