(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

மீனவர்களின் பிரச்சினையை இந்தியாவுடன் ராஜதந்திர ரீதியில் தீர்த்துக்கொள்ளாதவரையில்  மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது. இருதரப்புகளுக்கிடையில் இடம்பெறும் டீலே வடக்கு மீனவர்களின் பிரச்சினை தொடர்வதற்கு காரணமாகும் என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை  இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில்  கடற்றொழில், பெருந்தோட்டத்துறை மற்றும் காணி அமைச்சுகள் மற்றும்  இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டை சுற்றி கடல் இருந்தும் நாட்டின் பிரதான தொழிலாக கடல் தொழிலை மாற்றிக்கொள்ள முடியாமல் போயுள்ளது. இதற்கான முறையான வேலைத்திட்டம் இல்லாமையே காரணமாகும். விவசாயத்துறைக்கு வழங்கப்படும் ஊக்குவிப்பு கடல் தொழிலுக்கு வழங்கப்படுவதில்லை. பாடசாலை மட்டத்தில் கடற்றொழிலை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் மீனவர்கள் இன்று பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அவர்களுக்கு இருக்கும் காப்புறுதி திட்டம் முறையாக இயங்குவதில்லை. மீன்களை பாதுகாப்பதற்கான குளிர்சாதன வசதிகள் இல்லை. அதேபோன்று கடலிலும் அவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இவற்றுக்கு முறையான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

குறிப்பாக வடக்கு மீனவர்களின் பிரச்சினை காலா காலமாக தொடர்ந்து இருந்து வருகின்றது. ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் அவர்களின் பிரச்சினையை தீர்ப்பதாக தெரிவிக்கின்றனர். ஆனால் இன்றுவரை தீர்க்கப்படவி்லலை. இந்திய மீனவர்கள் பொட்டம் டோலர்களில் வந்து வடக்கில் மீன்களை பிடித்துச்செல்கின்றனர்.

கடல் வளத்தையும் அழிக்கின்றனர். எமது மீனவர்களின் படகுகளில் மோதி சேதப்படுத்திவிட்டு செல்கின்றனர். வாரத்துக்கு 3முறை இவர்கள் வருகின்றனர். இந்த பிரச்சினை பல வருடங்களாக இருந்து வருகின்றது. சட்ட ரீதியிலான பிரச்சினையே இதற்கு மூல காரணமாக இருந்து வருகின்றது.

குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழே கடந்த காலங்களில் சட்டவிராேத மீனவர்களை கைதுசெய்தனர். பின்னர் வரும் படகுகளை கைப்பற்றும் வகையில் இந்த சபையில் சட்டம் இயற்றப்பட்டது. அதன் பிரகாரம் வரும் படகுகள் கைப்பற்றப்பட்டன. அவ்வாறு இருந்தும் கைப்பற்றப்பட்ட படகுகளில் அதிகமானவை விடுவிக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவுக்கான பயணங்களில் இதுதான் இடம்பெறுகின்றது.

இருதரப்பு கலந்துரையாடல்களின்போது இந்த பிரச்சினைக்கு நேரடியாக தீர்வு காண்பதில்லை. அதற்குள் சிறிய டீல் போட்டுக்கொள்கின்றனர். இதற்கு பல உதாரணங்களை தெரிவிக்கலாம்.

அண்மை காலத்தில் மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து கைப்பற்றப்பட்ட படகுகள் சிலவற்றை விடுவித்தார்கள். பின்னர் ஜனாதிபதி தேர்தலில் இந்திய தயாரிப்பு என பெயரிட்டு மண்வெட்டி தலைகள் பங்கிடப்பட்டன. பொதுத் தேர்தலிலும் இது இடம்பெற்றது. மீனவர்களுக்கும் வழங்கப்பட்டன. இவ்வாறு இருப்பதால்தான் மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது இருக்கின்றது.

இது இராஜதந்திரமாக தீர்த்துக்கொள்ளவேண்டிய பிரச்சினையாகும். இந்திய, பாகிஸ்தான் அதனை தீர்த்துக்கொண்டுள்ளது. எங்களால்தான் அதனை இன்னும் தீர்த்துக்கொள்ள முடியாமல் இருக்கின்றது. அரசியல் தலையீடே இதற்கு காரணமாகும்.

தென்னிந்தியாவின் அரசியல்வாதிகளின் படகுகளே எமது கடல் எல்லைக்கு வருகின்றன. அதுதொடர்பில் நடவடிக்கை எடுக்கும்போது அவர்கள் இந்திய மத்திய அரசுக்கு அழுத்தம்கொடுக்கும்போது வெளிவிவகார அமைச்சினூடாக எமக்கு அழுத்தம் வருகின்றது. அரசியல்வாதிகளினால்தான் இந்த பிரச்சினையை இதுவரை தீர்த்துக்கொள்ள முடியாமல் இருக்கின்றது என்றார்.