நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணனின் இயக்கத்தில் தயாராக இருக்கும் புதிய திரைப்படத்திற்கு ' ப்ளூ இங்க்' என பெயரிடப்பட்டிருக்கிறது.

'பிரிவோம் சந்திப்போம்' என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். 

அதன் பிறகு ஏராளமான படங்களில் நடித்து சிறந்த குணச்சித்திர நடிகையாக அடையாளம் பெற்றாலும், 'ஆரோகணம்' என்னும் படத்தினை இயக்கி, இயக்குனராகவும் தன் திறமையை வெளிப்படுத்தினார்.  

இதனைத் தொடர்ந்து 'சொல்வதெல்லாம் உண்மை' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் விளிம்புநிலை மக்கள் முதல் மெத்தப்படித்த உயர் நிலை மக்கள் வரை தன்னுடைய நியாயமான பார்வையால் மனதை வசீகரித்தார்.

தொடர்ந்து சமூக பொறுப்பை உணர்ந்து தன்னுடைய எண்ணங்களை,' நெருங்கி வா முத்தமிடாதே', 'அம்மணி', 'ஹவுஸ் ஓனர்' ஆகிய படங்களை இயக்கி சர்வதேச அளவில் கவனம் பெற்றார். தற்போது அவர் 'ப்ளூ இங்க்' என்ற பெயரில் புதிய படத்தை இயக்கவிருக்கிறார். 

இதற்கான ஃபர்ஸ்ட் லுக்கை தன்னுடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் அவர்,  படத்தின் டைட்டிலுடன் டேக் லைனாக 'இந்த நீலம் சிவப்பு' என குறிப்பிட்டிருப்பதன் மூலம் பெண்கள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினை ஒன்றை இப்படத்தில் பேசவிருக்கிறார் என்பது தெரியவருகிறது.

இதன் காரணமாகவே இணையவாசிகள் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.