ஈரானின் மூத்த அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

மொஹ்சென் பக்ரிசாதே  ஈரான் தலைநகர் தெஹ்ரான் அருகில் காரில் பயணித்த போது அவரது கார் வெடிகுண்டு மூலம் குறிவைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

 

இதில் படுகாயம் அடைந்த நிலையில் பக்ரிசாதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்பு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஜவாத் ஸரீஃப் இந்த கொலையை கண்டித்து வெளியிட்டுள்ள  அறிக்கையில்  இது "அரச பயங்கரவாத செயல்" என்று கூறினார்.

 "ஈரான் அணு குண்டின் தந்தை" என்று வர்ணிக்கப்படும் இவர் ஈரானின் ரகசிய அணு ஆயுத திட்டத்தின் பின்னணியில் சூத்திரதாரி என மேற்கத்திய புலனாய்வு அமைப்புகள்  கருதுகின்றன.

An image released by the office of Iran’s supreme leader shows Mohsen Fakhrizadeh, the country’s top nuclear scientist, in January last year.

ஈரான் உற்பத்தி செய்யும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் அளவு அதிகரித்திருப்பது குறித்த புதிய கவலையின் மத்தியில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

செறிவூட்டப்பட்ட யுரேனியம் சிவில் அணு மின் உற்பத்தி மற்றும் இராணுவ அணு ஆயுதங்கள் இரண்டிற்கும் ஒரு முக்கிய அங்கமாகும்.

2010 ஆம் ஆண்டு மற்றும் 2012 ஆம் ஆண்டுக்கு இடையில் நான்கு ஈரானிய அணு விஞ்ஞானிகள் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் இக் கொலைகளுக்கு இஸ்ரேல் உடந்தையாக இருப்பதாக ஈரான் குற்றம் சாட்டியது. 

மே 2018 இல் ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அளித்த விளக்கத்தில் பக்ரிசாதேவின் பெயர் முக்கிய விஞ்ஞானியாக பெயரிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.