பி.சி.ஆர். முடிவுகள் கிடைக்க தாமதித்தால் கொத்தணியே உருவாகிவிடும் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

28 Nov, 2020 | 12:40 AM
image

(எம்.மனோசித்ரா)

பி.சி.ஆர். பரிசோதனைகளின் முடிவுகள் கிடைப்பது 48 மணித்தியாலங்களை விடவும் தாமதமாகுமாயின் குறித்தவொரு பிரதேசத்தில் முதலாவது தொற்றாளர் இனங்காணப்பட்டு அடுத்த தொற்றாளர்கள் இனங்காணப்படுவதற்கு முன்னர் ஒரு கொத்தணியே உருவாகிவிடும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே 24 மணித்தியாலங்களுக்குள்ளேனும் பி.சி.ஆர். பரிசோதனைகளின் முடிவுகளைப் பெற்றுக் கொள்வதற்கு செயற்திட்டமொன்று வகுப்பட வேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.

கொழும்பில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அழுத்கே மேற்கூறிய விடயங்களை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் ,

இது வரையிலும் தீர்வு காணப்படாத பிரச்சினையாக பி.சி.ஆர். பரிசோதனையின் அளவு காணப்படுகிறது. கொவிட் தொற்றை உறுதிப்படுத்துவதற்காக உலகலாவிய ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட முறைமையாக பி.சி.ஆர். பரிசோதனை காணப்படுகிறது. அதற்கமைய இலங்கையில் பி.சி.ஆர். பரிசோதனைகள் குறித்து 3 பிரதான பிரச்சினைகளை நாம் ஆரம்பத்திலிருந்து சுட்டிக்காட்டியுள்ளோம்.

அவற்றில் முதலாவது பி.சி.ஆர். பரிசோதனைகளின் அளவாகும். நாட்டில் வைரஸ் பரவல் வேகம் அதிகரித்துள்ள இந்த சந்தர்ப்பத்திலும் கூட 10 000 தொடக்கம் 12 000 வரையான பி.சி.ஆர். பரிசோதனைகளே முன்னெடுக்கப்படுகின்றன. எழுமாற்று பரிசோதனைகளுக்குச் சென்று நாட்டில் எந்தெந்த பகுதிகள் அபாயமுடையவையாகக் காணப்படுகின்றன என்பதை இனங்காண வேண்டுமானால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.

அத்தோடு கிளிநொச்சி அல்லது முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களை புறந்தள்ளி எழுமாற்று பரிசோதனைகளை முன்னெடுப்பது முறையல்ல. கொழும்பில் மாத்திரமே தொற்றாளர்கள் உள்ளனர் என எண்ணி அங்கு மாத்திரம் பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுப்பதால் உரிய தீர்வைக் காண முடியாது. ஏனைய பகுதிகளிலும் சனத்தொகைக்கு ஏற்ப விஞ்ஞானபூர்வமாக எழுமாற்று பரிசோதனைகளை முன்னெடுத்து அபாயத்தை இனங்காண வேண்டும்.

இந்த நடவடிக்கையின் ஊடாகவே நாடு தொடர்பில் உரிய நிலைப்பாட்டைப் பெற்றுக் கொள்ள முடியும். எனவே பி.சி.ஆர். பரிசோதனைகளின் அளவை இயன்றளவு அதிக்க வேண்டியது அத்தியாவசியமானதாகும். அதற்கான நடவடிக்கை எடுத்தால் மாத்திரமே எழுமாற்று பரிசோதனை வெற்றியளிக்கும்.

 அவ்வாறில்லாமல் நாளொன்றுக்கு சுமார் 10 000 பரிசோதனைகள் என்ற மட்டத்தில் காணப்பட்டால் தொற்றாளர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்களுக்கு மாத்திரமே பரிசோதனையை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும். எனவே இதன் மூலம் அதிகூடிய அவதானமுடைய பகுதிகளை மாத்திரமே எம்மால் இனங்காணக்கூடியதாக இருக்கும்.

முல்லேரியா ஆய்வு கூடத்திலுள்ள பி.சி.ஆர். மாதிரிகளை பரிசோதிக்கும் இயந்திரம் பழுதடைந்த போதும் இதே அளவான பரிசோதனைகளே முன்னெடுக்கப்பட்டன. எனினும் தற்போது அந்த இயந்திரம் சீனக் குழுவினரால் திருத்தப்பட்டுள்ளது. அவ்வாறெனில் எம்மால் பரிசோதனைகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க முடியும். ஆனால் அப்போதுள்ளதை விட தற்போது பரிசோதனைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சியே காணப்படுகிறது.

குருணாகல் , களுத்துறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் பெறப்படும் மாதிரிகளை பரிசோதிப்பதற்கு அந்த பகுதிகளில் பிரத்தியேக ஆய்வு கூடங்கள் நிருவப்படவில்லை. மாறாக அவை வேறு பகுதிகளிலுள்ள ஆய்வு கூடங்களுக்கே அனுப்பப்படுகின்றன. இதுவும் நெருக்கடிமிக்கதொரு விடயமாகும்.

பி.சி.ஆர். தொடர்பில் நாட்டில் காணப்படும் இரண்டாவது பிரச்சினை மாதிரிகளின் முடிவுகளில் ஏற்படும் தாமதமாகும். தாமதமானாலும் கூடியது 48 மணித்தியாலங்களிலாவது முடிவுகளைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். 48 மணித்தியாலங்களை விடவும் முடிவுகள் கிடைப்பதற்கு தாமதம் ஏற்பட்டால் அபாயமுடைய பிரதேசங்கள் தொடர்பில் தீர்மானங்களை எடுக்க முடியாது. பண்டாரகம மற்றும் அட்டலுகம ஆகிய பிரதேசங்கள் இதற்கு சிறந்த உதாரணமாகும்.

பி.சி.ஆர். முடிவுகள் தாமதமடைவதால் முதலாவது தொற்றாளர் இனங்காணப்பட்டதன் பின்னர் , ஒரு கொத்தணி உருவான பின்னரே அடுத்தடுத்த தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். எனவே தான் முடிவுகள் தாமதிப்பதை குறைத்துக் கொள்ளுமாறு தொடர்ந்தும் வலியுறுத்துகின்றோம். 24 மணித்தியாலங்களுக்கும் முடிவுகள் கிடைக்கும் வகையிலான செயற்திட்டமொன்று உருவாக்கப்பட வேண்டும்.

மூன்றாவது பிரச்சினை முடிவுகளின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துவதாகும். அரச தரப்பானாலும் , தனியார் தரப்பானாலும் தொடர்புகளை உறுதிப்படுத்த வேண்டும். இது தொடர்பிலும் தற்போது சிக்கல் காணப்படுகிறது. எனவே சர்வதேச மட்டத்திலான விதிமுறைகளை ஆராய்ந்து உரிய தீர்வை எடுக்குமாறு கோருகின்றோம். எவ்வாறிருப்பினும் கொவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியிருப்பதால் அதிகாரிகள் , பெற்றோர் உள்ளிட்ட அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டியது அத்தியாவசியமானதாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38