• இன்று 472 தொற்றாளர்கள்
  • சிறைச்சாலை கொத்தணியில் 821 தொற்றாளர்கள்
  • கொரேனாவால் மேலும் 08 பேர் மரணம்

 

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 22 ஆயிரத்தைக் கடந்துள்ளதோடு , மரணங்களின் எண்ணிக்கையும் 107 ஆக உயர்வடைந்துள்ளது. அத்தோடு இரண்டாம் அலையில் இனங்காணப்பட்ட தொற்றாளரின் எண்ணிக்கையும் 18 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 

இதே வேளை கடந்த ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி நாட்டில் கொரோனா பரவலில் இரண்டாம் அலை உருவானதன் பின்னர் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இன்று காலை வரை கொழும்பில் மாத்திரம் 8575 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

இன்று இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் 

இன்று வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணி வரை 472  புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இவர்கள் அனைவரும் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்களாவர். அதற்கமைய மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணிகளில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் எண்ணிக்கை 18 963 ஆக உயர்வடைந்துள்ளது. 

இதனையடுத்து நாட்டில் இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 22,500 ஆகும். இவர்களில் 16 226 பேர் குணமடைந்துள்ளதோடு 6175 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று வெளியிடப்பட்ட கொரோனா மரணங்களுக்கு அமைய நாட்டில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது. 

இன்று பதிவான மரணங்கள்

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக  எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 23ஆம் திகதி ஒருவரும், 27 ஆம் திகதி இரண்டு பேரும், 25 ஆம் திகதி மூவரும் பேரும், 26 ஆம் திகதி இரண்டு பேரும் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பின் பல பகுதிகளைச் சேர்ந்த, 36, 87, 54, 78, 83, 68, 69, 70 ஆகிய வயதுடைய நபர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் ஐவர் வீடுகளில் உயிரிழந்துள்ளதுடன் ஏனையவர்கள் வைத்திய சாலையில் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் நான்கு பெண்களும் கொழும்பு மெகசின் சிறைக்கைதி ஒருவர் உட்பட  நான்கு ஆண்களும் அடங்குகின்றனர். 

இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 107 ஆக உயர்வடைந்துள்ளது. 

கொழும்பில் 8000 ஐ கடந்த தொற்றாளர் எண்ணிக்கை 

ஒக்டோபர் 4 ஆம் திகதி மினுவாங்கொடை கொத்தணி உருவானதன் பின்னர் இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்கள் வரை கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 8000 இற்கும் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் 8575 தொற்றாளர்கள் இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளனர். நாட்டில் நாளாந்தம் இனங்காணப்படுகின்ற தொற்றாளர்களில் அதிகளவானோர் கொழும்பிலுள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

இது தவிர இரண்டாம் அலையில் கம்பஹா மாவட்டத்தில் 5802 தொற்றாளர்களும், களுத்துறையில் 906 தொற்றாளர்களும், கண்டியில் 378 தொற்றாளர்களும், குருணாகலில் 284 தொற்றாளர்களும், கேகாலையில் 210 தொற்றாளர்களும், இரத்தினபுரியில் 189 தொற்றாளர்களும், நுவரெலியாவில் 99 தொற்றாளர்களும், புத்தளத்தில் 97 தொற்றாளர்களும், அநுராதபுரத்தில் 90 தொற்றாளர்களும், அம்பாறையில் 52 தொற்றாளர்களும், மாத்தளையில் 37 தொற்றாளர்களும், அம்பாந்தோட்டையில் 25 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டதாக கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. 

சிறைச்சாலை கொத்தணியில் 821 தொற்றாளர்கள்

இன்று வெள்ளிக்கிழமை சிறைக்கைதிகள் மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 12 கைதிகள் வெலிக்கடை சிறைச்சாலையில் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

பூஸா சிறைச்சாலையில் 09 கைதிகளும் ஏனைய கைதிகள் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையிலும் அடையாளங்காணப்பட்டுள்ளனர். இதனடிப்படையில், சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 821 ஆக அதிகரித்துள்ளது.

இந்த தரவுகளுக்கமைவாக, வெலிக்கடை சிறைச்சாலையில் 323 பேருக்கும் பூஸா சிறைச்சாலையில் 70 பேருக்கும் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் கொரோனா தொற்றுடன் அடையாளங்காணப்பட்டோரின் எண்ணிக்கை 46 ஆக பதிவாகியுள்ளது. 

சிறைச்சாலை அதிகாரிகள் 46 பேர், கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் அவர்களில் மூவர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்றுக்குள்ளான 113 கைதிகள் பூரண குணமடைந்துள்ளனர்.