நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிவ்வெளிகம தோட்டத்தின் தொழிற்சாலை பிரிவில் 3ம் இலக்க லயன் குடியிருப்பில் இன்றிரவு (27.11.2020) ஏற்பட்ட தீ விபத்தால் 12 அறைகளைக்கொண்ட லயன் குடியிருப்பு முழுமையாக தீக்கிரையாகியுள்ளது. இதனால் 13 குடும்பங்களை சேர்ந்த 50 இற்கும் மேற்பட்டோர்  நிர்க்கதியாகியுள்ளனர்.

அவர்களின் உடமைகளும், முக்கியமான ஆவணங்களும்கூட எரிந்து சாம்பலாகியுள்ளன.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

குறித்த பகுதியில், தொழிற்சாலை பிரிவிலுள்ள லயன் குடியிருப்பொன்றில் இன்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மக்கள் கூச்சலிட்டுக்கொண்டு வெளியில் வந்தனர். அதற்கு தீ வேகமாக பரவியது. பிரதேச மக்கள் தீயை கட்டுப்படுத்துவதற்கு முயற்சித்தனர்.

அத்துடன், தீயணைப்பு பிரிவினருக்கும் அறிவித்தனர். எனினும், தீயணைப்பு பிரிவினர் சம்பவ இடத்துக்கு வருவதற்கு முன்பு லயன் குடியிருப்பு முழுமையாக எரிந்து சாம்பலாகியுள்ளது.

தீவிபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படத நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாப்பாக தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது நோர்வூட் பிரதேச சபை ஊடாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.