இந்தியாவில் நெல்லூர் அரசு இசைப் பாடசாலைக்கு மறைந்த பாடகர் எஸ்.பி.பியின் பெயரைச் சூட்டி கெளரவிக்க ஆந்திரா மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவின் முன்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் திகதி கொரோனா தொற்றால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்காக இந்திய திரையுலகமே பிரார்த்தனை செய்தபோதும் சிகிச்சை பலனளிக்காமல் செப்டம்பர் 25 ஆம் திகதி காலமானார்.

தமிழில், சாந்தி நிலையம் படத்தில் ‘இயற்கை என்னும் இளைய கன்னி’ பாடலைத்தான் முதன்முதலாக எஸ்.பி.பி பாடினார். ஆனால், முந்திக்கொண்டு வெளிவந்ததோ எம்.ஜி.ஆரின் அடிமைப்பெண் படத்தில் வரும் ’ஆயிரம் நிலவே வா’ பாடல்தான்.

இதுவரை 16 இந்திய மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனையிலும் இடம்பிடித்துள்ளார். பாடகர் மட்டுமல்ல, குணச்சித்திர நடிகர், தயாரிப்பாளர் போன்ற பன்முகத்திறமைக் கொண்டவர்.

இந்நிலையில் எஸ்.பி.பியை கெளவுரவிக்கும் விதமாக, நெல்லூரில் உள்ள அரசு இசைப் பாடசாலையை "எஸ்.பி பாலசுப்ரமணியம் அரசு இசை மற்றும் நடனப்பாடசாலை" என பெயர் மாற்ற ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.