(செ.தேன்மொழி)

மொனராகலை பகுதியில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு துப்பாக்கிகளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது துப்பாக்கி திருத்தம் செய்யும் நிலையமொன்றும் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

பாணந்துறை மத்திய ஊழல் தடுப்பு பிரிவானரால் மொனராகலை - பாலதுவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 4 குழல் 12 ரக துப்பாக்கிகளும் ,உள்நாட்டு துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது நாட்டுக்குள் இயங்கி வந்த துப்பாக்கி திருத்தம் செய்யும் நிலையமொன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.  நிலையத்திலிருந்து துப்பாக்கி திருத்த வேலைகளுக்காக பயன்படுத்தப்படும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது சந்தேக நபர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  33,59 மற்றும் 66 வயதுடைய நபர்கள் மூன்று பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.  மத்திய ஊழல் தடுப்புபிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹேமால் பிரசாந்தவின் மேற்பார்வையின் கீழ், பிரதான பொலிஸ் பரிசோதகர் அஜித் சாந்த உள்ளிட்ட அதிகாரிகளால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

மொனராகலை மற்றும் வெல்லாவ ஆகிய பகுதிகளில் ஊழல் தடுப்பு பிரிவினர் தொடர்ச்சியாக இவ்வாறான சுற்றுவளைப்புகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பகுதியில் சட்டவிரோத ஆயுதங்களை வைத்துக் கொண்டு சிலர் கஞ்சா வளர்ப்பில் ஈடுபடுவதாகவும் தெரியவந்துள்ளது. அதன்காரணமாகவே இந்த சுற்றிவளைப்புகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

அதற்கமைய கடந்த தினத்திலும் சியம்பலாண்டுவ பகுதியில் ரி56 ரக துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.