பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலுள்ள மிருகக்காட்சிசாலையில்  பல வருடமாக தனிமையை அனுபவித்து வந்த காவன் என்ற  இலங்கை யானை கம்போடியாவில் உள்ள சரணாலயத்துக்கு செல்லவுள்ளது.

யானைகள் இல்லாத நாடான பாகிஸ்தானிற்கு இலங்கை 1985 ஆம் ஆண்டு ஒரு வயதான காவன் என்ற யானையை அன்பளிப்பு செய்தது.

பின்னர் 1990 இல் அதற்கு துணையாக சஹோலி என்ற பெண் யானையையும் இலங்கை அன்பளிப்பு செய்தது.

2012ஆம் ஆண்டு சஹோலி என்ற பெண் யானை உயிரிழந்தது.

அதன்பின்னர் காவன் தனிமையில் இருந்தது. ஆசிய யானைகள் மிதவெப்பமான பகுதிகளில் வாழும் நிலையில், பாகிஸ்தானின் மிருகக்காட்சிசாலையில் காவன் மோசமான சூழலில் வசித்தது. சுமார் 40 பாகை செல்சியஸ் வெப்பநிலையில் அது வசித்தது.

தனிமையில் வசிப்பதால் விரக்தியில் இருந்த அந்த யானை குழப்பத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டு 2015 இல் சங்கிலியால் அது பிணைக்கப்பட்டது.

இதை அறிந்த, அமெரிக்காவின் புகழ்பெற்ற நடிகையும், பொப் பாடகியுமான செர், காவன் யானையை சங்கிலியில் இருந்து விடுவித்து, சுதந்திரமாக நடமாட அனுமதிக்கவேண்டும் என்றும், காவனுக்குத் துணையாக பெண் யானை ஒன்றை ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.

உலகளவில் அவர் தொடர்ந்து குரல் கொடுத்தார். அவரது முயற்சியால் உலகம் முழுவதும் 200,000 க்கும் மேற்பட்டவர்கள் கையெழுத்திட்ட மனு பாகிஸ்தானிடம் கையளிக்கப்பட்டது.

பின் இந்த பிரச்சனை நீதிமன்றம் சென்றது. காவன் யானையின் நிலையை உணர்ந்த பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் கடந்த மே மாதம்  21 ஆம் திகதி விடுவிக்க உத்தரவிட்டது.

இதனை அடுத்து காவன் யானை கம்போடியாவில் உள்ள சரணாலயத்துக்கு செல்லவுள்ளது.

தற்போது 35 வயதான காவனை ஆடல் பாடலுடன் பிரியாவிடை கொடுக்க விலங்கியல் ஆர்வலர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதனால் ‘நாங்கள் உன்னை மிஸ் செய்வோம்’ என்ற வாசகத்துடன் தினமும் மகிழ்ச்சியான பிரிவு உபச்சார விழா நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், விமானத்தின் பிரத்யேக கூண்டு மூலம் பறக்க உள்ள காவனுக்கு சிறப்பு பயிற்சிகளும், மருத்துவ பரிசோதனைகளும் நடைபெற்று வருகின்றன. வரும் 29ம் தேதி விமானம் மூலம் கம்போடியா சென்று புதுவாழ்வை காவன் தொடங்க உள்ளது.

வாழ்க்கையின் பாதி நாள்களை தனிமையிலேயே கழித்த காவன் யானை, இனியாவது மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என பலரும் உருக்கமாக தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.