இந்தியாவில் குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த வைத்தியசாலையில் நேற்றிரவு  திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்து மீட்கப்பட்டு உள்ளனர். 

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை. 

இந்த சம்பவம் பற்றி விசாரணை மேற்கொள்ளும்படி குஜராத் மாநிலத்தின் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த வைத்தியசாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துக் கொண்டார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,

ராஜ்கோட்டில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் பற்றி செய்தியறிந்து ஆழ்ந்த துயரடைந்தேன்.  இந்த துரதிஷ்டவசமான சோக சம்பவத்தில் தங்களது அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் துயர நினைவுகளில் நானும் பங்கு கொள்கிறேன்.

இந்த தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டும் என இறைவனை வேண்டி கொள்கிறேன்.  இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து சாத்தியப்பட கூடிய உதவிகளையும் அரசு நிர்வாகம் உறுதிப்படுத்தும் என தெரிவித்துள்ளார்.