(செ.தேன்மொழி)

முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை என்பவற்றுக்காக கடந்த 28 நாட்களுக்குள் 744 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 18 பொலிஸ் பிரிவுகளும், 11 கிராமசேவகர் பிரிவுகளும் முடக்கப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் இருப்பவர்கள் தொடர்ந்தும் பயணக்கட்டுபாடு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

பீ.சீ.ஆர் பரிசோதனைகள் அல்லது சுகாதார வழிமுறைகள் தொடர்பில் சுகாதார பிரிவினர் ஏதேனும் ஆலோசனை வழங்கினால் அதற்கிணங்க செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்படா விட்டால் அவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கமைய சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் மட்டுமன்றி நாட்டின் அனைத்து பகுதகளிலும் வசிப்பவர்கள் , முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் என்பவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.  

அதற்கமைய இன்று காலை ஆறு மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் மாத்திரம் சமூக இடைவெளியை பேணாமை, முகக்கவசம் அணியாமை தொடர்பில் மாத்திரம் 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 28 நாட்களுக்குள் இது தொடர்பில் 744 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.