இந்தியா - அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டியிலேயே டேவிட் வோர்னர் மற்றும் ஆர்ரோன் பின்ஞ்ச் ஆகியோர் அரைசதங்களை விளாசியுள்ளனர்.

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. 

ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்றைய தினம் துறைமுக நகரான சிட்னியில் ஆரம்பமாகியுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்திரேலிய அணியானது சற்று முன்னர் 29 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டினை இழந்து 163 ஓட்டங்களை பெற்றுள்ளது.

டேவிட் வோர்னர் 76 பந்துகளில் 69 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, ஆரோன் பிஞ்ச் 96 பந்துகளில் 78 ஓட்டங்களுடனும், ஸ்டீவ் ஸ்மித் ஒரு ஓட்டத்தையும் பெற்று ஆட்டமிழக்காதுள்ளனர்.

கொரோனா தொற்று பரவலால் இந்திய அணியின் சில தொடர்கள் தள்ளிவைக்கப்பட்டன. மார்ச் மாதம் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஆடிய பிறகு இந்திய அணி களம் காணும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும். 

இதனால் இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. அதுவும் மைதானத்தில் கணிசமான அளவுக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்பட இருப்பதால் வீரர்களுக்கு கூடுதல் உத்வேகத்தை அளிக்கும்.

இந்திய அணியில் காயத்தால் ரோகித் சர்மா இடம்பெறாதது பின்னடைவாகும். அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் தொடக்க ஆட்டக்காரராக இறங்குவார் என்று தெரிகிறது. 

விராட் கோலி, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் இந்தியாவின் துடுப்பாட்டத்துக்கு வலு சேர்க்கிறார்கள். 

சாதனையின் விளிம்பில் நிற்கும் விராட் கோலி இந்த தொடருக்குள் அவர் 133 ஓட்டங்களை எடுத்தால் 12 ஆயிரம் ஓட்டங்களை அதிவேகமாக கடந்த வீரர் என்ற சிறப்பை பெறுவார். 

பந்து வீச்சில் பும்ரா, ஷமி, ஜடேஜா, சாஹல் உள்ளிட்டோர் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

அவுஸ்திரேலிய அணியை பொறுத்தவரை துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் பலம் வாய்ந்த அணியாக உள்ளது.

ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், அணித் தலைவர் ஆரோன் பிஞ்ச், மெக்ஸ்வெல் ஆகியோர் துடுப்பாடத்தில் மிரட்டக்கூடியவர்கள். 

உள்ளூர் சூழல் ஆஸ்திரேலியாவுக்கு சாதகமான அம்சமாகும். 

சிட்னி மைதானம் பெரும்பாலும் துடுப்பாட்டத்துக்கு உகந்த வகையில் இருக்கும். சுழற்பந்து வீச்சும் ஓரளவு எடுபடும். கடைசியாக இங்கு நடந்த 7 ஒரு நாள் போட்டிகளில் 6 இல் முதலில் துடுப்பாட்டம் செய்த அணிகளே வெற்றி பெற்றிருக்கின்றன. 

இந்த காலக்கட்டத்தில் முதலில் துடுப்பாட்டம் செய்த அணிகளின் சராசரி ஓட்டம் 312 ஆகும்.

இந்திய அணி இந்த மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 17 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி அதில் 2 இல் மட்டுமே வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.