Published by T. Saranya on 2020-11-27 11:25:11
சி.டி.விக்ரமரத்ன இலங்கையின் 35 ஆவது பொலிஸ்மா அதிபராக பொலிஸ் தலைமையகத்தில் சற்று முன்னர் கடமைகளை பொறுப்பேற்றார்.
சுமார் ஒன்றரை வருடங்களாக வெற்றிடமாக உள்ள பொலிஸ் மா அதிபர் பதவிக்கு, பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவை நியமிக்க ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பரிந்துரை செய்தார்.
அந்த பரிந்துரையை ஆராய்ந்த பாராளுமன்ற பேரவை இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 35 ஆவது பொலிஸ் மா அதிபராக, தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபரான சி.டி. விக்ரமரத்னவை நியமிக்க அனுமதி வழங்கியது.
இந் நிலையிலேயே அவர் இன்றைய தினம் தனது புதிய பதவியை பொறுப்பேற்றுள்ள நிலையில், கடமைகளையும் பொறுப்பேற்றார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் பொலிஸ் மா அதிபராக இருந்த பூஜித் ஜயசுந்தர கட்டாய விடுமுறையில் அனுப்பட்ட நிலையில், அவ் விடுமுறையில் இருந்தபோதே கடந்த ஏப்ரல் மாதம் ஓய்வுபெற்றார்.
அவர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டது முதல் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தற்போதுவரை பதில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.