முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளருக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்ட நிலையில், புதுக்குடியிருப்பு பொலிசாரின் உதவியுடன் குறித்த ஊடகவியலாளர் அவ்விடத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

இன்று (27)  மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்வதற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றினால்  தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவான பொலிஸார் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் வீதிகள் மற்றும் பொது இடங்களில் குறிப்பாக மாவீரர் துயிலும் இல்லங்களில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தும் முகமாக துயிலுமில்லங்களில் இராணுவத்தினர் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் செய்தி அறிக்கையிட சென்ற நிலையிலேயே  இந்த சம்பவம் இடம்பெற்று இருக்கின்றது.

இந்நிலையில், குறித்த இடத்திலிருந்து ஊடகவியலாளர் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தொடர்பு கொண்ட போது குறித்த இடத்தில் கடமையில் இருந்த பொலிஸாரை உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பி இருந்தார்.

அதன் பின்னர் ஊடகவியலாளரை குறித்த இடத்திலிருந்து செல்வதற்கு அனுமதி வழங்கினர்.

முல்லைத்தீவு மாவட்டத்திலே தொடர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.