(எம்.மனோசித்ரா)

மேல் மாகாணத்தில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் ஏனைய பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியாவிட்டால் , கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகளை நடத்துவதற்கான தினம் குறித்து மீளாய்வு செய்யப்படும் என்றும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

எதிர்வரும் 10 நாட்களில் அல்லது இரு வாரங்களில் நிலைமை குறித்து ஆராய்ந்த பின்னரே உத்தியோகபூர்வமான தீர்மானத்தை அறிவிக்க முடியும் என்றும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்திலிருந்து இணையவழியூடாக நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு 3 நாட்கள் கடந்துள்ளன (நேற்றுடன்). இந்நிலையில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட முதலாம் நாள் மாணவர்களின் வரவு 34 சதவீதமாகவும் , இரண்டாம் நாள் 44 சதவீதமாகவும், மூன்றாம் நாள் 51 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. இத்தினங்களில் ஆசிரியர்களின் வருகை 82 சதவீதமாகும். அதற்கமைய பாடசாலைக்கு மாணவர்கள் வருகை தரும் வீதம் தற்போது அதிகரித்துள்ளது.

மேம் மாகாணத்தில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் தற்போது பாடசாலைகளை ஆரம்பிக்க முடியாத நிலைமையே காணப்படுகிறது.

அதே போன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலும் பாடசாலைகளை திறக்க முடியாத நிலை காணப்படுகிறது. எனவே தான் இதே நிலைமை தொடருமானால் எதிர்வரும் இரு வாரங்களில் அல்லது 10 நாட்களில் ஜனவரி மாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை குறித்து மீளாய்வு செய்ய தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

மாறாக பரீட்சையை குறிப்பிட்டதினத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டால் , சாதாரண தரத்தில் உள்ள அனைத்து பாட அலகுகளையும் உள்ளடக்கி பரீட்சையை நடத்துவதா அல்லது இது வரையில் நிறைறு செய்யப்பட்டுள்ள அலகுகளில் மாத்திரம் பரீட்சையை நடத்துவதா என்பது குறித்து ஆராயப்படும். எவ்வாறிருப்பினும் 10 நாட்களின் பின்னர் நிலைவரத்தை அவதானித்த பின்னரே இறுதி தீர்மானம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.

அத்தோடு மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக மத்திய மாகாணத்திற்கு 63 இலட்சம், தென் மாகாணத்திற்கு 49 இலட்சமும், வடக்கு மாகாணத்திற்கு 36 இலட்சமும், கிழக்கு மாகாணத்திற்கு 46 இலட்சமும், வடமேல் மாகாணத்திற்கு 56 இலட்சமும், வடமத்திய மாகாணத்திற்கு 30 இலட்சம், ஊவா மாகாணத்திற்கு 38 இலட்சம் மற்றும் சப்ரகமுவ மாகாணத்திற்கு 48 இலட்சம் என நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய முழு நாட்டிலுமுள்ள பாடசாலைகளுக்கு 370 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதித் தொகை மாகாண பணிப்பாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.

இம்முறை பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து இசுருபாயவில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை. மாறாக பாடசாலை அதிபர், பிரதேச பொது சுகாதார பரிசோதகர், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அல்லது பிரதி பொறுப்பதிகாரி, கிராம சேவகர், பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலை அபிவிருத்தி குழு என்பவற்றின் உறுப்பினர்களை உள்ளடக்கி குழுவொன்றை நியமித்து அதன் மூலம் தீர்மானம் எடுக்குமாறு அறிவிக்கப்பட்டது.

இலங்கையில் 6 தொடக்கம் 11 வரை வகுப்பொன்றில் 15 இற்கும் குறைவான மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட பாடசாலைகள் 28.6 சதவீதமும் , 16 - 30 க்கு இடைப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையைக் கொண்ட பாடசாலைகள் 43.6 சதவீதமும், முழு நபட்டிலும் 500 இற்கும் குறைவான மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட பாடசாலைகள் 71.3 வீதமுமாக காணப்படுகிறது. இவ்வனைத்து பாடசாலைகளுக்கும் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

இவற்றுக்கிடையிலும் கண்டி மாவட்டத்தில் 45 பாடசாலைகளை தற்காலிகமாக மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. அத்தோடு கிளிநொச்சி மாவட்டத்தில் அனைத்து பாடசாலைகளையும் திறக்காமலிருப்பதற்கும் , அம்பலாங்கொடையில் இரு பாடசாலைகளும் , பதுளை - ஹாலிஎலை பாடசாலை என்பன தற்போது சிக்கலுக்குரியதாகியுள்ளன. எனினும் இவ்வாறான சவால்களைத் தாண்டி கல்வியை தடையின்றி வழங்குவதே எமது இலக்காகும். பெற்றோரும் ஆசிரியர்களும் மாணவர்களும் இதனையே எதிர்பார்க்கின்றனர்.

அபாயம் காணப்படுகிறது என்பதற்காக பாடசாகைளை தொடர்ந்தும் திறக்காமலிருக்க முடியாது. கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் இடம்பெறும் போதும் இவ்வாறான அபாயமான நிலைமையே காணப்பட்டது. எனினும் சுமார் மூன்றரை வாரங்களில் பரீட்சைகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டன. தனிமைப்படுத்தப்பட்டிருந்த 658 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றினர். இரண்டு தடவைகள் ஒத்தி வைக்கப்பட்டு பின்னர் இவ்வாறு சவால்களுக்கு மத்தியில் உயர்தர பரீட்சைகள் நடத்தி முடிக்கப்பட்டதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் பெற்றோர் மாத்திரமின்றி சமூகத்திலுள்ள அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். ஏதேனுமொரு நோய் அறிகுறி காணப்பட்டால் பிள்ளைகளை வீட்டிலேயே பாதுகாப்பாக வைத்திருக்குமாறு கோருகின்றோம் என்றார்.