(எம்.மனோசித்ரா)

மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து இன்று வெள்ளிக்கிழமை அரச மற்றும் தனியார் பேரூந்து துறையினருடன் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தலைவர் கிங்ஸ்லி ரணவக தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்திலிருந்து இணையவழியூடாக நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நடத்தப்பட்ட போது இலங்கை போக்குவரத்து சபையால் மாணவர்களுக்கு போக்குவரத்து ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டன.

சில சந்தர்ப்பங்களில் ஒரேயொரு மாணவருக்காகவும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டன. அதே போன்று இம்முறையும் மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் 375 பஸ்கள் பாடசாலை மாணவர்களுக்காக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதன் போது சில பகுதிகளில் பஸ்களில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுவதால் மேலதிகமாக பஸ் தேவை காணப்படுவதாக கோரிக்கை விடுக்கப்பட்டது. எனவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் அந்தந்த பகுதிகளிலுள்ள டிப்போக்களில் தேவையான பஸ்களை மாணவர்களுக்கான சேவையில் ஈடுபடுத்துவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கான போக்குவரத்து சேவை குறித்து இன்று தனியார் மற்றும் அரச போக்குவரத்து சேவையுடன் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடலின் பின்னர் உரிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என்றார்.