உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிற்படுத்தப்படுவதற்கு அரசியல்வாதிகளோ தேர்தல்கள் ஆணைக்குழுவோ பொறுப்பில்லை. தேர்தல்கள் தொகுதிவாரியாக நடத்தப்படவேண்டும் என பாராளுமன்றத்தில் அங்கிகரிக்கப்பட்டிருக்கும் சட்டமூலமே இதற்கு காரணமாகும். அத்துடன் தேர்தல் எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டு அதுதொடர்பான சிக்கல்கள் நிறைவடைந்த பின்னர் தேர்தல் தொடர்பான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டிருக்கவேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் தேர்தல்கள் அமைப்புக்கான சர்வதேச மன்றம் என்பன இணைந்து இளைஞர்களின் தேர்தல் அறிவு மற்றும் பங்கேற்பை வலுவூட்டும் வகையில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் செய்தியாளர் சந்திப்பு நேற்று தேர்தல்கள் ஆணைக்குழு செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது ஊடகவியலாளர் ஒருவரால் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொகுதிவாரியாக நடத்தப்படவேண்டும் என பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலமே தேர்தல் பிற்படுவதற்கான பிரதான காரணமாகும். இதற்கு அரசியல்வாதிகளோ தேர்தல்கள் ஆணைக்குழுவோ பொறுப்பில்லை.   

2013 ஆம் ஆண்டு மார்ச் முதல் மட்டக்களப்பு மாவட்டத்தில் சில பிரதேசசபைகள் இயங்கவில்லை. அதேபோன்று வவுனியா நகரசபை 2013 ஆம் ஆண்டு  ஆகஸ்ட் மாதம் முதல் நிறுத்திவைக்கப்பட்டு ஆணையாளர் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ். மாநகரசபை 2014 ஆகஸ்ட் முதல் இயங்காமல் அங்கு ஆணையளர் நியமிக்கப்பட்டுள்ளார். ஏன் அங்கு தேர்தலை நடத்தமுடியவில்லை? தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை நடத்தாமல் இருப்பதாக இன்று கூறுகின்றனர். அப்படியாயின் அன்று ஏன் தேர்தல் ஆணையாளருக்கு நடத்த முடியவில்லை? ஏனெனில் தேர்தலை நடத்தவேண்டியது விருப்புவாக்கு முறைக்கும் விகிதாசார முறைக்குமாகும்.

மேலும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் 2012 ஆம் ஆண்டு டிசம்பரில் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. அப்போது தேர்தல் தொகுதிகளை  பிரித்து தேசிய குழு அறிக்கையை கடந்த வருடம் ஆகஸ்ட்டில் கையளித்தது.  எங்களுக்கு வர்த்தமானி அறிவித்தல் ஒக்டோபரில் வந்தது. அதன் பின்னர்  முறைப்பாடுகளை ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டது.  2013 ஆம் ஆண்டு பெப்ரவரியில் இதில்  தொழிநுட்ப பிரச்சினை இருப்பதாக நாங்கள் சுட்டிக்காட்டினோம். அவை முழுமையாக சரிசெய்யப்பட்டிருக்கவில்லை. தற்போதுதான் இறுதி சட்டமூலம்  நிறைவேற்றப்பட்டுள்ளது.  

அத்துடன் இது இன்று நேற்று வந்த பிர்ச்சினையோ அல்லது அரசியல் வாதிகளின் பிரச்சினையோ அல்ல. 2013 ஆம் ஆண்டில் இருந்து ஏற்பட்டுவரும் பிரச்சினையாகும். ஏனெனில் தேர்தல் எல்லை நிர்ணயிக்கப்பட்டு அதுதொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்படுவதற்கு முன்னர் பாராளுமன்றத்தில் தேர்தல் தொடர்பான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் தேர்தலை உடனடியாக நடத்த முடியாமல் இருக்கின்றது. 

அத்துடன் உள்ளூராட்சி மன்றதேர்தலை உடனடியாக நடத்த முடியாது என அனைவருக்கம் தெரியும். இருந்தபோதும் அரசியல் வாதிகள் இதுதொடர்பில் வெறும் பிரசாரங்களை மேற்கொண்டுவருகின்றனர் என்றார்.