(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

பாடசாலைகளை ஆரம்பிக்கும் தீர்மானத்தை அனைவருடனும் கலந்துரையாடியே  பின்னரே மேற்கொண்டேன்; கொழும்பில் இருந்து தீர்மானிக்கவில்லை; என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று  மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் பாடசாலைகள் எந்த திட்டமிடலும் இல்லாமலேயே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவினால் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொவிட் அச்சுறுத்தல் இல்லாத பிரதேசங்களின் மாணவர்களை தொடர்ந்தும் வீடுகளில் முடக்கி வைத்திருக்க முடியாது. 

அதனால் மேல் மாகாணம் தவிர்ந்து ஏனைய மாவட்டங்களின் வலய பணிப்பாளர்கள் அதிபர்களுடன் இதுதொடர்பாக கலந்துரையாடி பாடசாலைகளை ஆரம்பிக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தேன். 

இதுதொடர்பாக வலய கல்வி பணிப்பாளர்களுடன் நான் தனிப்பட்ட முறையில்  கதைத்தேன். அதன் பிரகாரம் 23ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிக்க அதிபர்கள் மற்றும் வலய அதிகாரிகள் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர். 

நாங்கள் கொழும்பில் இருந்துகொண்டு இந்த தீர்மானத்தை எடுக்கவில்லை.

அத்துடன் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் ஏதாவது அவசர நிலைமைகள் ஏற்பட்டால் அதுதொடர்பாக தீர்மானம் எடுக்கும் அதிகாரம் வலய பணிப்பாளர்களுக்கு வழங்கியிருந்தோம்.

அதன் பிரகாரமே கண்டி, கிளிநொச்சி போன்ற பிரதேசங்களில் சில பாடசாலைகளை தற்காலிகமாக மூடிவிட அங்குள்ள அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

மேலும் பாடசாலைகளின் சுகாதார பாதுகாப்புகளை மேற்கொள்வதற்காக 370இலட்சம் ரூபா ஒதுக்கியிருக்கின்றோம். 

அந்த பணத்திலே வலய கல்வி அதிகாரிகள் பாடசாலைகளின் தேவைக்காக செலவழித்து வருகின்றனர். அதனால் பாடசாலைகளுக்கு பணம் கிடைக்கவில்லை என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.

அத்துடன் எந்தவொரு வேலையை ஆரம்பிக்கும்போது, அதில் குறைபாடுகள் இருக்கலாம்; விமர்சனங்கள் வரலாம்; கொவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே நாங்கள் உயர்தர பரீட்சையை நடத்தினோம். 

இந்த பரீட்சை இரண்டுமுறை பிற்போடப்பட்டிருந்தது. இதனால் மாணவர்கள் பாரியளவில் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தனர். 

உயர்தர பரீட்சையை நடத்த தீர்மானிக்கப்பட்டபோது பல விமர்சனங்கள் வந்தன. மிகவும் சவாலான விடயம் என்பது எமக்கு தெரியும். 

என்றாலும், நடத்தி முடிக்கலாம் என்ற தைரியம் எமக்கு இருந்தது. அனைவரும் இணைந்து செயற்பட்டதால் வெற்றிகரமாக பரீட்சையை நடத்தி முடித்தோம்.

அதனால் தற்போதும் பாடசாலைகளை ஆரம்பிக்கும்போது விமர்சனங்கள் வந்தன. பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட 23ஆம் திகதி 34வீதமான மாணவர்களே வருகை தந்திருந்தனர். ஆனால், நேற்றைய தினம் 51வீதமான மாணவர்கள் வருகை தந்திருந்தனர். 

அதேபோன்று 82வீதமான ஆசிரியர்கள் வருகை தந்திருந்தனர். 

எனவே, தொடர்ந்தும் பாடசாலைகளை மூடி மாணவர்களை வீடுகளுக்குள் முடக்கிவைத்துக்கொள்ள முடியாது. படிப்படியாக எமது நடவடிக்கைகளை நாங்கள் ஆரம்பித்து செல்லவேண்டும். 

மேல்மாகாணத்தில் தற்போதைக்கு பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான வாய்ப்பு இல்லை. அதனால் அந்த மாணவர்கள் வீடுகளில் இருந்தவாறு கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றோம் என்றார்.