கிழக்கு மாகாணத்தில் 144 பேர் இதுவரை கொவிட் தொற்றாளர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அக்கரைப்பற்று சுகாதார அலுவலகப்பிரிவு மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 13 பேர் அடையாளப் படுத்தப்பட்டுள்ளனர். இதில் அக்கரைப்பற்றில் மாத்திரம் 10 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று சந்தையில் எழுமாறாக 20 பேருக்கு மேற்கொண்ட பி.சி.ஆர்;.பரிசோதனையின் போதே இந்த 10 பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதையடுத்து அக்கரைப்பற்று சுகாதார அலுவலகப் பிரிவு தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் அங்கு தொடர் பி.சி.ஆர் பரிசோதனைகள் மற்றும் ஏனைய பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பொது மக்கள் பூரண ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

பேலியகொட மீன் சந்தை கொத்தணி போன்று இங்கும் சிறிய கொத்தணி ஏற்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, இதிலிருந்து அனைவரையும் பாதுகாக்க சுகாதார துறை அதிகாரிகள், பாதுகாப்பு தரப்பினர் கடுமையாக போராடிக் கொண்டிருக்கின்றனர். இதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும்.

இந்நிலையில் நேற்று புதன்னகிழமை (25) அடையாளப்படுத்தப்பட்ட 13 புதிய தொற்றாளர்களில் அக்கரைப்பில் 10 பேரும், காத்தான்குடியில் இருவரும், சாய்ந்தமருதில் ஒருவருமாகும். 

காத்தான்குடியில் அடையாளப்படுத்தப்பட்டவர்களில் ஏற்கனவே தொற்றுக்குள்ளான பெண்ணுடன் நேரடி தொடர்புட்ட பெண் ஒருவரும் மற்றும் கொழும்பிலிருந்து வந்த ஒருவருமாகும்.

கிழக்கு மாகாணத்தில் 144 பேர் இதுவரை கொவிட் தொற்றாளர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதில் இன்று வியாழக்கிழமை வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 85 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 16 பேரும், அம்பாறையில் 8 பேரும் கல்முனையில் 35 பேரும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோன்று டெங்கின் தாக்கமும் அதிகரித்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்த பொது மக்கள் பூரண ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.