சுற்றுலா அவுஸ்திரேலியா அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் 3 ஆம் நாள் ஆட்டநேர முடிவின்போது குசால் மெண்டிஸின் நிலையான துடுப்பாட்டத்தின் உதவியுடன் இலங்கை அணி 286 ஓட்டங்களுக்கு ஆறு விக்கட்டுகளை இழந்துள்ளது.

ஆட்டநேர முடிவின்போது ஆட்டமிழக்காமல் களத்தில் நின்ற குசால் மெண்டிஸ் தனது முதலாவது சதத்தை கடந்து 169 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

இரண்டாவது நாள் முடிவில் 6 ஓட்டங்களுக்கு ஒரு விக்கட்டை இழந்த இலங்கை அணி 3 ஆம் நாள் ஆட்டத்தின் ஆரம்பத்தில் கருணாரத்ன ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்த நிலையில் இக்கட்டான நிலையில் இருந்தது.

இந்நிலையில் அடுத்து களம் நுளைந்த கவுசல் சில்வா 7 ஓட்டங்களுடனும், அணித்தலைவர் மெத்தியுஸ் 9 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க இலங்கை அணி 86 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை இழந்தது.

அடுத்ததாக களமிறங்கிய சந்திமால் சற்று நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் 42 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்துடன் அடுத்து வந்த தனஞ்சய டி சில்வா 36 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

எவ்வாறாயினும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குசால் மெண்டிஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 169 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

அவுஸ்திரேலிய அணி சார்பில் மிச்சல் ஸ்டார்க் மற்றும் லையோன் ஆகியோர் தலா 2 விக்கட்டுகளை கைப்பற்றினர்.

இதேவேளை இலங்கை அணி மூன்றாவது நாள் நிறைவில் 196 ஓட்டங்களால் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.