இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் இருநாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாளை வெள்ளிக்கிழமை இலங்கை வரவுள்ளார்.

இதன்போது அவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட அரசின் முக்கியஸ்தர்களை சந்தித்துப் பேசவுள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட பிரதிநிதியாக இலங்கை வரும் அஜித் டோவல், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் உள்ளடங்கலாக தமிழர் தரப்பு அரசியல் தலைவர்களையும் சந்தித்துப் பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பாகவும் பேச்சுக்கள் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக சீனாவின் உயர்மட்டப் பிரதிநிதிகள் விஜயம்செய்து, இலங்கையின் முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தமையைத் தொடர்ந்து அஜித் டோவலின் விஜயம் அமைந்துள்ளமை அரசியல் அவதானிகளால் முக்கியத்துவம் வாய்ந்ததாக நோக்கப்படுகின்றது.

இதேவேளை கொழும்புத்துறைமுகத்தின் கிழக்கு முனையம் இந்தியாவிற்கு முழுமையாக வழங்கப்பட மாட்டாது எனவும் தேசிய வளங்களை பிறநாட்டவர்களுக்கு விற்கும் கொள்கை அரசாங்கத்திற்குக் கிடையாது என்றும் விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே அண்மையில் தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.