உலகில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் எந்த ஒரு நாடும் விதிவிலக்கல்ல என்றே கூற வேண்டும். 

அதிலும் மூன்றாம் உலக நாடுகளான இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இச்சம்பவங்கள் அதிகரித்தே வருகின்றன .

இலங்கையைப் பொறுத்தமட்டில் ஊர்காவற்றுறை பாடசாலை மாணவியான வித்தியா மீதான கூட்டுப்பாலியல்  படுகொலைச் சம்பவம் உலகையே உலுக்கியது என்று கூறலாம்.

இந்தியாவில் இத்தகைய  கூட்டு பாலியல் பலாத்கார சம்பவங்கள் குறைவின்றி தொடர்ந்து வருகின்றன.

மருத்துவ கல்லூரி மாணவி, இளம் பெண் பொருளியலாளர்,  இளம் மருத்துவர் என பலர் கூட்டுப்பாலியலுக்கு இலக்காகி பரிதாபகரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

எந்தவிதமான ஈவிரக்கமின்றி இந்த படுகொலைச் சம்பவங்கள் சர்வசாதாரணமாக இடம்பெற்று வருகின்றன. 

இவற்றுக்கு எதிராக அதி உச்ச தண்டனை வழங்கினாலும் இவ்வாறான சம்பவங்களை தடுத்து நிறுத்த முடிவதில்லை.

 மரண தண்டனை விதித்த நிலையிலும்  குற்றச் செயலில் ஈடுபடுவோர் அதனை ஒரு பாடமாக கொண்டதாகத் தெரியவில்லை.  

இதன் காரணமாகவே சவுதி அரேபியா போன்று குற்றவாளிகளுக்கு சிரச் சேதம் செய்தல் வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றது.

எனினும், மனித உரிமை அமைப்புகள் அவற்றுக்கு எதிராக குரல் கொடுத்து வருவதால் அதனை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் நிலை தொடர்கின்றது.

எவ்வாறு இருப்பினும் இத்தகைய பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின்முன் அதி உச்ச தண்டனை வழங்க வேண்டும் என்பதில் முழு உலகமுமே  ஒத்த கருத்தைக் கொண்டுள்ளது.

இதேவேளை, பாகிஸ்தானில் முன்மாதிரியான சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில்,  குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். 

குற்றவாளிகளை பொது இடத்தில் வைத்து தூக்கிலிடவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பாகிஸ்தான் அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டது. 

இந்நிலையில், பாலியல் துஷ்பிரயோக குற்றவாளிகளுக்கு ஆண்மையை நீக்கி தண்டனை வழங்குவதற்கும், கற்பழிப்பு வழக்குகளை விரைவாக விசாரிப்பதற்கும் பிரதமர் இம்ரான் கான் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. 

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான அவசர சட்ட வரைவை அமைச்சரவை கூட்டத்தில் தாக்கல் செய்தபோது, இந்த கடுமையான தண்டனை குறித்து முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

எனினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

காவல்துறையில் பெண்களை அதிக அளவில் சேர்ப்பது, கற்பழிப்பு வழக்குகளை விரைவாக விசாரிப்பது, சாட்சிகளின் பாதுகாப்பு ஆகிய அம்சங்கள் இந்த சட்ட வரைபில் இருந்ததாக கூறப்படுகிறது. 

குற்றவாளிகளை பொது இடத்தில் வைத்து தூக்கிலிடவேண்டும் என்று சில அமைச்சர்கள் பரிந்துரை செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

இதேவேளை, ஆண்மை நீக்க தண்டனை ஒரு தொடக்கமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள ஆளுங்கட்சி செனட்டர் பைசல் ஜாவேத் கான், விரைவில் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படும் என கூறியுள்ளார்.

இச் சட்டம் விரைவில் நடைமுறைக்கு வரவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்