கொவிட்டை காரணம் காட்டி பாராளுமன்ற ஊடகவியலாளர்களுக்கு மாத்திரம்  தடை போட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.என எதிர்க்கட்சி உறுப்பினர் மனுஷ நாணயக்கார மற்றும் கயந்த கருணாதிலக்க தெரிவித்தனர்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை  இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் ஊடகத்துறை,வெளிவிவகார அமைச்சுக்கள் மற்றும் பிராந்திய உறவுகள் அலுவல்கள் இராஜாங்க அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தனர்.

மனுஷ நாணயக்கார தெரிவிக்கையில்,

வெகுசன ஊடகத்துறை தொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்று விவாதம் இடம்பெறுகின்றபோதும் ஊடகவியலாளர்களுக்கு பாராளுமன்றத்துக்கு தடை விதித்திருக்கின்றது. 

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் முக்கியமான கருத்துக்கள் நாட்டுக்கு வெளிப்படுத்தும்போது அந்த சந்தர்ப்பங்களில் நேரலைகளில் கோளாறுகளை ஏற்படுத்தி மக்களுக்கு அதனை கேட்கும் சந்தர்ப்பம் தடுக்கப்படுவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

மேலும் கொரோனா தொற்று காரணமாகவே பாராளுமன்றத்துக்கு ஊடகவியலாளர்களை அனுமதிக்காமல் இருப்பதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. அப்படியானால் ஊடகவியலாளர்களுக்கு மாத்திரமா கொரோனா தொற்று ஏற்படுகின்றது என கேட்கின்றோம். பாராளுமன்ற பொலிஸ் அதிகாரிகளுக்கு, ஊழியர்ளுக்கு, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதில்லையா? அப்படியாயின் ஏன் ஊடகவியலாளர்களுக்கு மாத்திரம் தடைவிதிக்கவேண்டும் என கேட்கின்றேன்.

மேலும் சிரேஷ்ட ஊடகவியலாளர்களான லசன்த்த விக்ரதுங்க, கீத் நோயார். எக்னலிகொட போன்றவர்களின் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியுமாகியது 2015க்கு பிரகாகும். அவர்களின் கொலை தொடர்பான விசாரணைகள் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டாலும் ஒருசிலரின் விசாரணை அறிக்கைகளும்  அரசாங்கத்தில் மாயமாகியுள்ளன.

அதனால் கடந்த அரசாங்கம் இந்த விசாரணைகளை ஆரம்பத்தில் இருந்து மேற்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டது. விசாரணைகள் அதிகமானவை இறுதி கட்டத்திலேயே இருந்தன. ஆனால் இந்த அரசாங்கம் வந்ததன் பின்னர் விசாரணை அறிக்கைகள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது என்றார்.

அதனைத்தொடர்ந்து கயந்த கருணாதிலக்க உரையாற்றுகையில்,

வரவு செலவு திட்ட விவாதம் இடம்பெறும் இந்த நாட்களில் பாராளுமன்ற ஊடகவியலாளர் கலரி வெறிச்சோடியிருக்கின்றது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அவர்களை அனுமதிக்காமல் இருக்க கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானித்ததாக அறிவிக்கப்பட்டது. தற்போதுள்ள நிலையில் அது சரியாக இருந்தாலும் இதனை தொடர்ந்து மேற்கொள்ள இடமளிக்க கூடாது என்ற கோரிக்கையை ஊடகவியலாளர்கள் முன்வைக்கின்றனர்.

கொரோனா தொற்றுக்குள்ளான ஊடகவியலாளர்கள் பீ.சீ.ஆர். பரிசோதனை மேற்கொண்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதுதொடர்பாக அரசாங்கம் கவனம்செலுத்தவேண்டும் என்றார்.