(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

இலங்கைக்கு அளவுக்கு அதிகமான கடன்களை கொடுத்து எம்மை பணயக் கைதியாக வைத்துக்கொள்ளவே சீனா நினைக்கின்றதே தவிர உணர்வுபூர்வமான நட்புறவை இலங்கையுடன் வைத்துக்கொள்ள சீனா நினைக்கவில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல சபையில் தெரிவித்தார்.

மொம்பாசாவிற்கு நடந்த கதியே போர்ட் சிட்டிக்கும் நேரும் எனவும் அவர் சபையில் எச்சரிக்கை விடுத்தார். ஊடகம், வெளிவிவகார அமைச்சுகள் மற்றும் பிராந்திய உறவு அலுவல்கள் இராஜாங்க அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

சர்வதேசத்துடன் மோதிக்கொண்டு அரசாங்கத்தினால் எதனையும் செய்ய முடியாது. இன்று அரசாங்கம் நியமித்துள்ள தூதுவர்களில் சிலர் தற்கொலை தாரிகள் போன்றவர்கள்.

இவர்கள் போன்றவர்களை வைத்துக்கொண்டு சர்வதேசத்தை அரவணைக்க முடியாது. அத்துடன் இன்று கொவிட் நெருக்கடிக்கு பின்னர் தூதரகங்கள் அர்த்தமற்ற ஒன்றாக செயற்பட்டு வருகின்றன.

இன்று நியமிக்கப்பட்டுள்ள தூதுவர்கள் மேற்கு நாடுகளுக்கு எதிராக பேசிக்கொண்டுள்ளனர். ஆனால் மேற்கு நாடுகளே எமது வர்த்தகத்தில் 60 வீத வர்த்தக பங்களிப்பை செலுத்துகின்றது. நீங்கள் நம்பிக்கொண்டுள்ள சீனா எம்மை கடனில் நசுக்குகின்றதே தவிர அவர்களின் வர்த்தகம் 1.5 வீதம் என்பதை மறந்துவிட வேண்டாம்.

சீனா சிறிய நாடுகளுக்கு உதவுவதாக கடன்களை கொட்டி, இறுதியாக அந்த நாடுகளின் வளங்களை அபகரித்து வருகின்றதையும் பாருங்கள். சீனா கடன்களை மட்டுமல்லாது கொவிட் -19யும் தந்துள்ளது.

எமக்கு மட்டுமல்ல முழு உலகத்திற்கும் கொடுத்துள்ளது. நீங்கள் கூறுவதை போல் சீனா உணர்வுபூர்வமாக இலங்கையுடன் இணைந்துள்ளது என்றால் ஏன் இலங்கையின் பொருளாதாரத்தில் அவர்களின் பங்களிப்பை செய்யவில்லை. அவர்களுக்கு எம்மிடம் இருந்து பொருட்களை பெற்றுக்கொள்ள எந்த அவசியமும் இல்லை. அளவுக்கு அதிகமான கடன்களை எமக்கு கொடுத்து எம்மை பணயக்கைதியாக வைத்துக்கொள்ளவே சீனா நினைக்கின்றது.

மொம்பாசாவிற்கு என்ன நடந்துள்ளது. மொம்பாசாவிற்கு கொடுத்த கடன்களை மீள செலுத்தவில்லை என்பதற்காக அவர்களின் மொம்பாசா துறைமுகம் சீனாவிற்கே சொந்தமாக்கப்பட்டுள்ளது. இலங்கையின் போர்ட் சிட்டிக்கும் அதே நிலைமையே ஏற்படும் என்பதை மறந்துவிட வேண்டாம் என்றார்.